/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
கோபத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி எது?
/
கோபத்தை கட்டுப்படுத்த சிறந்த வழி எது?
PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

கோபத்தைச் சரியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அது பல மன, உடல் நலப் பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும். இன்றைய தேதிக்கு மாறி வரும் வாழ்வியல் சூழலில், பலரும் கோபத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பொதுவாகக் கோபமாக இருக்கும்போது அதை வெளியேற்றும் விதமாக ஓடுதல், ஜாக்கிங், குத்துப் பையைக் குத்துதல் உள்ளிட்ட செயல்களை செய்வது நல்ல பலன் தரும் எனக் கருதப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகள் இவை பலன் தராது எனத் தெரிவிக்கின்றன.
பல்வேறு நாடுகள், வயது, பாலினத்தைச் சேர்ந்த 10,189 பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட 154 வெவ்வேறு ஆய்வு முடிவுகளை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒஹியோ பல்கலை, ஆராய்ச்சி செய்தது. கல்லுாரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், குற்றப் பின்னணி உள்ளவர்கள் எனப் பலதரப்பட்ட மக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், ஜாக்கிங் முதலிய ஆற்றலை வெளியேற்றும் பயிற்சிகள் ஒரு பகுதியினருக்கும், மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா ஆகிய பயிற்சிகள் மற்றொரு பகுதியினருக்கும் பரிந்துரைக்கப்பட்டன.
ஆய்வு முடிவில், ஆற்றலை வெளியேற்றும் பயிற்சிகள் கோபத்தை அதிகரித்தனவே அன்றி தணிக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால் மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா ஆகிய பயிற்சிகள் கோபம், பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகின்றன என்று கண்டறியப்பட்டது.

