/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து
/
சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து
PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

குடல் அழற்சி நோய் (Inflammatory Bowel Disease) ஏற்படுவதற்கான காரணம் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. உடல் எடை இழப்பு, கடும் வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த நோயால் கண் பிரச்னை, தோல் நோய்கள் துவங்கி, குடல் புற்று நோய் வரை அடுத்தடுத்து ஏற்படலாம். உணவுப் பழக்கம், மன அழுத்தம் ஆகியவற்றால் இந்த நோய் தீவிரமடையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் இது தொடர்பாக சீனாவில் உள்ள கேபிடல் மருத்துவப் பல்கலை, எலிகளை கொண்டு ஆய்வு செய்தது. ஆய்வாளர்கள், ஒரு பகுதி எலிகளுக்கு சிவப்பு இறைச்சி என்று அழைக்கப்படும் பன்றி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியை தினமும் உண்ண கொடுத்தனர்.
மற்றொரு பகுதி எலிகளுக்கு வழக்கமான உணவு கொடுத்தனர். இரண்டு பகுதி எலிகளுக்கும் டெக்ஸ்ட்ரான் சல்பேட் சோடியம் எனும் வேதிப்பொருளை கொடுத்து, குடல் அழற்சி நோயை துாண்டினர்.
இரண்டு வாரம் கழித்து எலிகளை ஆராய்ந்தனர். சிவப்பு இறைச்சி உட்கொண்ட எலிகளுக்கு குடல் அழற்சி நோய் தீவிரமடைந்திருந்தது. மற்ற எலிகளுக்கு அவ்வளவு தீவிரமடையவில்லை. இதற்கு காரணம், சிவப்பு இறைச்சி உடலுக்கு நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களை அழிப்பதும், தீமை செய்யும் பாக்டீரியாக்களை பெருகச் செய்வதும் தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எலிகள் மீதான ஆய்வு மனிதர்களுக்கும் பொருந்தும். எனவே, தினமும் 100 - 120 கிராம் சிவப்பு இறைச்சி உண்ணும் மனிதர்களுக்கு, குடல் அழற்சி தீவிரம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், வாரம் இரு முறை மட்டும் இதே அளவு என இறைச்சி உண்பதை குறைத்துக் கொள்வது நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.