PUBLISHED ON : ஜூன் 25, 2026 07:37 AM

இன்று நாம் காணும் கோள்களை விட அதிக கோள்கள் நமது சூரிய குடும்பத்தில் இருந்திருக் கலாம் என்று விஞ்ஞானிகள் கருதி வருகின்றனர். விண்வெளியின் அந்த தொடக்க கால கொந்தளிப்பான சூழலில், குறைந்தபட்சம் இரண்டு கோள்களாவது காணாமல் போயிருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளது. விண்ணியல் அறிஞர்களைப் பல ஆண்டுகளாகக் குழப்பி வந்த இந்த மர்மத்திற்கு இக்கண்டுபிடிப்பு ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இருந்த குழப்பமான சூழலை, ஆராய்ச்சியாளர்கள் கணினி மாதிரி மூலம் மறுவடிவமைப்பு செய்து ஆராய்ந்தனர். இந்த மாதிரிகளின்படி, நமக்கு தெரிந்த கோள்களுடன் சேர்ந்து கூடுதல் கோள்களும் உருவாகியிருக்கலாம் என்றும், பின்னர் அவை விண்வெளிக்கு வெளியேற்றப்பட்டிருக்கலாம் அல்லது பிற கோள்களுடன் மோதி அழிந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே உள்ள ஆச்சரியமளிக்கும் பெரிய இடைவெளியைப் பற்றியும் விளக்குகிறது.
இப்பகுதியில் ஒரு கூடுதல் கோள் இருந்திருக்கலாம் என்றும், அது மறைவதற்கு முன்பு அண்டை கோள்களின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருது கின்றனர். பிற நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கோள் அமைப்புகள் நமது சூரிய குடும்பத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுவதற்கும் இத்தகைய நிகழ்வுகளே காரணமாக இருக்க லாம்.
புதிய முடிவுகள் இந்த மர்மத்தை தீர்ப்பதற்கு பதிலாக, மேலும் ஆழமாக்குகின்றன. கோள்கள் உண்மையில் காணாமல் போயிருந்தால், தொடக்கத்தில் எத்தனை கோள்கள் இருந்தன, அவை எங்கு சென்றன மற்றும் இன்று நாம் காணும் சூரிய குடும்பத்தை வடிவமைப்பதில் அவை என்ன பங்காற்றின என்பதை வானியலாளர்கள் இனிமேல் கண்டறிய வேண்டும்.
