/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மரபணு மாற்றி, சத்துகளை ஏற்றி சாதனை!
/
மரபணு மாற்றி, சத்துகளை ஏற்றி சாதனை!
PUBLISHED ON : செப் 19, 2024 12:00 AM

பீட்டா கரோடின் என்பது மனித உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து. இதை வைத்தே நமது உடல் வைட்டமின் 'ஏ' சத்தை உற்பத்தி செய்கிறது. இது கண்பார்வை, நோயெதிர்ப்பு சக்தி, செல் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவசியம். வைட்டமின் ஏ சத்து சிலவகை புற்றுநோய்கள், அல்சைமர் நோய், இதய நோய் உள்ளிட்டவற்றைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள், இளஞ்சிவப்பு நிற காய்களான பூசணி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றில் பீட்டா கரோடின் அதிகம்.
இலைக்கோஸ் எனப்படும் லெட்யூஸ், இலைகளாலான ஒரு காய்கறி. இது சாண்ட்விஜ் உள்ளிட்ட உணவுகளில் பயன்படுகிறது. இதில் பீட்டா கரோடின் சத்து ஓரளவு உள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐபிஎம்சிபி (IBMCP) ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சாதாரண இலைக்கோசில் சில மரபணு மாற்றம் செய்து அதில் உள்ள பீட்டா கரோடின் சத்தை 30 மடங்கு அதிகரித்துள்ளனர்.
இந்தச் சத்தை அதிகரிக்கும்போது அந்தக் காயின் நிறமும் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. எனவே இதற்கு 'தங்க இலைக்கோஸ்' (Golden Lettuce) என்ற பெயரிட்டுள்ளனர். இதன் நிறம் நம்மைக் கவரும் விதத்தில் உள்ளது. அதேநேரம் சத்து மிக்கதாகவும் உள்ளது. இதில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள சத்தை மிகச் சுலபமாக நம் உடலால் உறிஞ்சிக் கொள்ள முடியும் என்பது தான்.
இந்தப் புதிய இலைக்கோஸை முள்ளங்கி, பட்டாணி முதலிய காய்கறிகளுடன் சாலடாக கலந்து சாப்பிடலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

