PUBLISHED ON : ஆக 21, 2025 12:00 AM

பூ மிக்கு அருகே இருப்பவை இரண்டு கோள்கள். ஒன்று செவ்வாய், மற்றொன்று வெள்ளி. இவற்றில் வெள்ளி அதிக வெப்பநிலையை உடையது. அதனால், இங்கு தரையிறங்கி ஆய்வுசெய்வது சுலபமான காரியம் அல்ல. ஆனால், செவ்வாய் அப்படி அல்ல.
அங்கே நிலவுகின்ற தட்பவெட்ப நிலை, நம்முடைய விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்வதற்குத் தகுந்தாற்போல் உள்ளது.
அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா நவம்பர் 26, 2011ம் ஆண்டு 'கியூரியாசிட்டி' விண்கலத்தைச் செவ்வாய் கோளுக்கு அனுப்பியது. கார் அளவில் இருக்கும் ஓர் ஊர்தி இதனுடன் அனுப்பப்பட்டது. இது செவ்வாயின் 'கேள் பள்ளத்தை' ஆராய்ந்து வருகிறது.
இந்தப் பள்ளம் 154 கிலோ மீட்டர் அகலம் உடையது. இதில் இறங்கி தன்னுடைய ஏழு அடி நீளம் உள்ள துதிக்கையைப் போன்ற அமைப்பைக் கொண்டு, செவ்வாயின் கற்களை ஆராய்ந்து வருகிறது இந்த ஊர்தி.
இது தற்போது பவளப்பாறை வடிவத்தில் இருக்கும் ஒரு பாறையைக் கண்டறிந்துள்ளது. 'கியூரியாசிட்டி' விண்கலத்தில் இருக்கின்ற ஒரு கேமரா மூலம் இது படம் எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாயில் தண்ணீர் இருந்தபோது இந்தப் பாறை உருவாகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, மணல் அல்லது பாறைகள் மீது தண்ணீர் ஓடும்போது ஒரு தடம் உருவாகும்.
தண்ணீர் காய்ந்துவிட்ட போதும் அந்தத் தடம் அப்படியே இருக்கும். இதைச் சுற்றி காற்றினால் மண்ணரிப்பு ஏற்படும் போது இந்தப் பாறை மட்டும் தன்னுடைய பழைய வடிவம் மாறாமல் இருக்கும். அதனால் இப்படியான பவளப்பாறை போன்ற வடிவங்கள் உருவாகின்றன.
பூமியிலும் இதுபோன்று பல இடங்களில் காண முடியும். செவ்வாயில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் இருந்தது குறித்த ஆய்வுக்கு, இந்தப் பாறைகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.