PUBLISHED ON : ஆக 07, 2025 12:00 AM

தொலைநோக்கிகள் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டுபிடித்துத் தருகின்றன. அவற்றால் கூட காணமுடியாத விஷயங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டவை தான் ரேடியோ தொலைநோக்கிகள். இவை ரேடியோ அலைகளைக் கொண்டு பிரமாண்ட கருந்துளைகள், பிரபஞ்ச மூலக்கூறுகளை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளன. பூமியில் சில நாடுகளில் இந்தத் தொலைநோக்கிகள் உள்ளன.
ஆனால் பூமியில் கார் இஞ்சின், செல்போனிலிருந்து செயற்கைக்கோள் வரை பல கருவிகள் ரேடியோ கதிர்களை வெளியிடுவதால் தொலைநோக்கியால் பிரபஞ்சத்திலிருந்து வரும் ரேடியோ கதிர்களைப் பிரித்தறிய முடியாமல் போகிறது.
இதற்குப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இடைஞ்சல்கள் தொடரவே செய்கின்றன.
எனவே நிலவில் இந்த தொலைநோக்கிகளை வைத்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவின் நாசா, கலிபோர்னியா பல்கலை உள்ளிட்ட அறிவியல் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
இந்தத் திட்டத்திற்கு 'லுாசி-நைட்' (Lunar Surface Electromagnetics Experiment - LuSEE--Night) என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலவின் பகுதியில் வைத்தால், பூமியிலிருந்து வரும் ரேடியோ கதிர்களின் தொந்தரவு இருக்கும் என்பதால் பூமியைப் பார்க்காத நிலவின் மறு பக்கத்தில் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 மாதங்கள் தொடர்ந்து இயங்க உள்ள இந்த தொலைநோக்கி பிரபஞ்ச மர்மங்களை நமக்கு காட்டிக் கொடுக்கும்.

