PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

1 சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு ரயில் தயாரிப்பு நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் ரயிலை வடிவமைத்துள்ளது. ஒரே ஒருமுறை எரிவாயுவை நிரப்பி 2,803 கி.மீ. துாரத்தை, 46 மணி நேரங்களில் கடந்துள்ளது. இதன் வாயிலாக இந்த ரயில், அதிக துாரம் பயணம் செய்த ஹைட்ரஜன் எரிவாயு ரயில் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
2 மருத்துவவரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை எடுத்து 62 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர். பொருத்துவதற்கு முன்பாகப் பன்றியில் உள்ள சில மரபணுக்களை நீக்கி, மனிதர்களுக்கான மரபணுக்களை அதில் சேர்த்தனர்.
3 நினைவுக் குறைபாடு ஏற்படுத்தும் மூளை நோயான அல்சைமர் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அமிலாய்டு புரதங்கள் மூளைத் திசுக்களில் படிவதுதான். இவ்வாறான படிதலுக்கும் PDE4B எனும் நொதிக்குமான தொடர்பை இங்கிலாந்தைச் சேர்ந்த லான்காஸ்டர் பல்கலை கண்டறிந்துள்ளது. இந்த நொதி உடலில் உற்பத்தியாவதைத் தடுத்தால் கட்டிகள் உருவாவதைத் தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
4 அமெரிக்காவின் நாசா 2026ம் ஆண்டு நிலவுக்குத் தாவரங்களைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது. நிலவில் உள்ள குறைவான ஈர்ப்பு விசையில், அங்குள்ள மண்ணில் தாவரம் எவ்வாறு வளர்கிறது என்று ஆராய்வதே இதன் நோக்கம்.
5 புவி வெப்ப மயமாதலால் துருவத்தில் பனிப்பாறைகள் உருகுகின்றன. இவ்வாறு உருகுவதால் பூமியின் சுழற்சி வேகம் மாறுபடுவதாகவும் அதனால் ஒரு நாளின் நீளம் அதிகரிப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை கண்டறிந்துள்ளது.

