PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

நமது பூமிக்கு வெளியே உயிர்கள் வாழ்கின்றனவா என்ற தேடுதல் நீண்ட காலமாக நடந்து வருகிறது. செவ்வாய், நீர் நிறைந்துள்ள டைட்டன், யுரோப்பா உள்ளிட்ட சில நிலவுகளிலும் உயிர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால், பூமிக்கு மிக அருகே இருக்கும் வெள்ளிக் கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.
காரணம், அதன் பரப்பளவின் வெப்பம், 464 டிகிரி செல்சியஸ். காற்றழுத்தம் மிக அதிகம், பூமியின் கடலடியில் 900 மீட்டரில் உள்ள அழுத்தத்திற்குச் சமமானது. இதன் வளிமண்டலத்தில் 96 சதவீதம் கரியமில வாயு தான் உள்ளது. இதன் மேகங்கள் கந்தக அமிலத்தால் ஆனவை.
வெள்ளியின் தரையிலிருந்து, 48 முதல் 60 கி.மீ. உயரத்தில் மேகங்களுக்கு இடையே சில அடர் புள்ளிகள் நகர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவை பார்ப்பதற்கு பூமியிலுள்ள பாக்டீரியா போல் இருந்துள்ளன.
ஆனால், கந்தக அமிலத்தில் பாக்டீரியாவால் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தீர்க்க அமெரிக்காவைச் சேர்ந்த எம்.ஐ.டி பல்கலை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
உயிர்களுக்கு அடிப்படையான 20 விதமான அமினோ அமிலங்களை வெள்ளியின் மேகங்களில் உள்ள அதே செரிவுள்ள கந்தக அமிலக் கரைசலில் வைத்துச் சோதித்தனர். நான்கு வாரங்களுக்குப் பிறகு பார்த்தபோதும் அமினோ அமிலங்கள் சிதையவே இல்லை.
இதன் வாயிலாக, உயிர்கள் உருவாவதற்கு அடிப்படையான சில அமிலங்கள் எவ்வித பாதிப்புமின்றி வெள்ளி யின் மேகங்களில் இருக்க முடியும் என்பது தெரிய வந்துள்ளது.
இருந்தாலும் உயிர்கள் வாழ்வதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்ட வேறு சில அம்சங்கள் வெள்ளியில் இல்லை என்பதால் உயிர்கள் வாழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகளில் ஒருசாரார் கூறுகின்றனர். இன்னும் தீவிரமான ஆய்வுகள் மேற்கொண்டால் இந்தாண்டின் இறுதியில் உயிரினங்கள் இருப்பதை உறுதிப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

