தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'வாட்ஸாப்'பில் பேசி, 'கட்டிங்' வசூலிக்கும் பெண் அதிகாரி!

 'வாட்ஸாப்'பில் பேசி, 'கட்டிங்' வசூலிக்கும் பெண் அதிகாரி!

 'வாட்ஸாப்'பில் பேசி, 'கட்டிங்' வசூலிக்கும் பெண் அதிகாரி!


PUBLISHED ON : செப் 22, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“பழி ஓரிடம், பாவம் ஓரிடம்னு புலம்புறாருங்க...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.

“என்ன விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“தகவல் உரிமை சட்டத்துல, திருப்பூர் மாநகராட்சியில் சில தகவல்களை கேட்டு, சமூக ஆர்வலர் ஒருத்தர் மனு குடுத்தாரு... பல மாசங்களா பதில் வராத சூழல்ல, முதல் மற்றும் இரண்டாவது முறையீட்டு மனுக்களை சமூக ஆர்வலர் குடுத்தாருங்க...

“அதுக்கும் பதில் வராததால, மாநில தகவல் ஆணையத்தில் புகார் குடுத்தாரு... தகவல் தராம இழுத்தடிச்ச மாநகராட்சியின் பொது தகவல் அலுவலர், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி ஆணையம் உத்தரவு போட்டுச்சுங்க...

“இதுல என்ன வேடிக்கைன்னா, பொது தகவல் அலுவலரான மாநகராட்சி உதவி கமிஷனர் சந்தான நாராயணன் ஓய்வுபெற்று வீட்டுக்கே போயிட்டாரு... ஆனா, தற்போதைய மாநகர் நல அலுவலர் மோகன் பெயரை குறிப்பிட்டு, அவர் இழப்பீடு தரணும்னு தகவல் கமிஷன் உத்தரவு போட்டிருக்கு...

“இதனால, 'நான் இங்க வேலைக்கே வராதப்ப நடந்த சம்பவத்துக்கு தண்டம் கட்டணுமா'ன்னு மோகன் புலம்பிட்டு இருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.

“அமைச்சர் பிடிவாதத்தால அதிகாரிகள் தவிக்கிறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு தனி துறையை உருவாக்கினாங்க... இது, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் குமார் வசம் இருக்குது பா...

“சென்னைக்கு பக்கத்துல, 1,000 ஏக்கர்ல பல்கலைக்கழகத்துடன் கூடிய ஏ.ஐ., நகரத்தை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கு... ஆனா, தகவல் தொழில்நுட்ப துறைக்கு சென்னையை ஒட்டி, 1,000 ஏக்கர் இடம் மொத்தமா இல்ல பா...

“இதனால, தொழில் துறையின் கீழ் இயங்கும், 'டிட்கோ' நிறுவனம் வாயிலா, ஏ.ஐ., நகரத்தை அமைக்க அதிகாரிகள் முடிவு செஞ்சாங்க... ஆனா அமைச்சர் குமாரோ, 'என் துறை மூலமா தான் ஏ.ஐ., நகரத்தை அமைக்கணும்... அப்படி அமைச்சிட்டா, என் ஒரே துறை மூலமா, தமிழக அரசின் 10 லட்சம் கோடி ரூபாய் கடனையும் அடைச்சிடலாம்'னு சொல்றாரு... 'அதெல்லாம் சாத்தியமே இல்ல'ன்னு அதிகாரிகள் சொ ன்னாலும், அமைச்சர் ஏத்துக்க மாட்டேங்கிறாரு பா...” என்றார் அன்வர்பாய்.

“ஆட்டம் தாங்க முடியல வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு அதிகாரி இருக்காரு... இவரது பெண் உதவியாளர் தான், 'கட்டிங்' வசூல் எல்லாத்தையும் பார்த்துக்கிடுதாங்க வே...

“வருவாய் துறை அதிகாரிகள், ஊழியர்கள், இடமாறுதல் உட்பட எந்த விஷயத்துக்கும் அதிகாரியை அணுகினாலும், 'கட்டிங்' வெட்டாம காரியம் நடக்காது... 'கட்டிங்' விவகாரத்தை எல்லாம் பெண் உதவியாளர், 'வாட்ஸாப் கால்'ல தான் பேசுதாங்க வே...

“கட்டிங் தொகையை ரொக்கமா தரணும்... அதையும், அவங்க சொல்ற இடத்துல தான் தரணும்... குறிப்பா, பட்டாக்கள் வழங்க, லட்சக்கணக்கில் வசூல் பண்ணுதாங்க வே...

“சமீபத்துல நடந்த ஜமாபந்திக்கு வந்த அதிகாரிக்கு, 'மீன் சாப்பாடு ஏற்பாடு செஞ்சே ஆகணும்'னு சக அதிகாரிகளிடம் அதிகாரமா உத்தரவு போட்டு, வாங்கி குடுத்திருக்காங்க வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“வினோத்குமார், இப்படி உட்காரும்... சந்திரா ஷேமம் தான ஓய்...” என நண்பரிடம் குப்பண்ணா நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us