/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அனல்மின் நிலைய அதிகாரியின் தனி ஆவர்த்தனம்!
/
அனல்மின் நிலைய அதிகாரியின் தனி ஆவர்த்தனம்!
PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

வி நாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறி கொண்ட நண்பர்கள் மத்தியில், ''லஞ்ச அதிகாரியின் ஆசையை கேளுங்க வே...'' என்றபடியே, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊர் அதிகாரியை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாநகராட்சி யில் இருக்கும் ஒரு அதிகாரி, பொள்ளாச்சி நகராட்சிக்கு கமிஷனராக துடியா துடிக்காரு... கோவையில் முக்கிய பொறுப்புல இருந்தாலும், பொள்ளாச்சிக்கு வந்தா தனிக்காட்டு ராஜாவா இருக்கலாம்னு நினைக்காரு வே...
''இதுக்காக, ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் சீறும் தலைவரது சிபாரிசில், தன் துறையின் முக்கிய புள்ளி வரைக்கும், 'கவனிப்பு' செய்து, பொள்ளாச்சியை பிடிக்க காய் நகர்த்திட்டு இருக்காரு... இந்த அதிகாரி, ஏற்கனவே இருந்த பல நகராட்சிகள்லயும் லஞ்ச புகார்கள்ல சிக்கியிருக்காரு வே...
''கோவையிலும் புகுந்து விளையாடிட்டு தான் இருக்காரு... இவரை பொள்ளாச்சிக்கு கொண்டு வர்றதுக்காகவே, அங்க இருக்கிற கமிஷனரை இடமாறுதல் செய்யவும் ஏற்பாடு நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
டீ கடை ரேடியோவில், 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்...' என்ற, திருவிளையாடல் படத்தின் வசனம் ஒலிக்க, அதை கேட்டபடியே, ''எல்லை தாண்டிய பயங்கரவாதம் பத்தி, முதல்வரிடம் புகார் பண்ணிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதெல்லாம் மத்திய அரசு சம்பந்தப்பட்டதாச்சே ஓய்...'' என, வியப்பாக கேட்டார் குப்பண்ணா.
''முழுசா கேளுங்க... கடலுார் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளிகள் ரெண்டு பேருமே, கோட்டையிலும் முக்கிய பதவிகள்ல இருக்காங்க... கிழக்கு மாவட்ட புள்ளியின் மகன் தான் கான்ட்ராக்ட் உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கிறாருங்க...
''இவர், மேற்கு மாவட்டத்துலயும் தன் அதிகார எல்லையை விரிவாக்க பார்க்கிறாரு... இப்படி எல்லை தாண்டி மூக்கை நுழைக்கிறதால, ரெண்டு தரப்புக்கும் முட்டல், மோதல் வருதுங்க...
''இதனால, மேற்கு மாவட்ட புள்ளியும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,வும், சமீபத்துல முதல்வருடன் நடந்த, 'உடன்பிறப்பே வா' சந்திப்புல, இதை பத்தி புகார் தெரிவிச்சிருக்காங்க... முதல்வரும், இந்த மாதிரி பஞ்சாயத்துகளை பேசி தீர்க்கும் மாநில நிர்வாகியை கூப்பிட்டு, 'கடலுார் பஞ்சாயத்தை பைசல் பண்ணுங்க'ன்னு உத்தரவு போட்டிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கணேசனும், பன்னீரும் பைக்ல வேகமா எங்க போறா...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த குப்பண்ணாவே, ''வகை தொகையில்லாம வாரி சுருட்டறார் ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரியை கையாளும் பிரிவுல இருக்கற அதிகாரியின் ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு... அனல் மின் நிலையத்திற்கு தேவையான இயந்திரங்கள், தளவாடங்களை வாங்கறதுக்கு அதிகாரிகள் குழுவினர் கூடி பேசி முடிவெடுக்கணும் ஓய்...
''ஆனா, இவர் யாரையும் கலந்து ஆலோசிக்காம, தன்னிச்சையா முடிவு எடுத்து, எல்லாத்தையும் வாங்கிடறார்... எல்லாம் கமிஷன் விவ காரம் தான் காரணம் ஓய்...
''இவரை பத்தி, சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாகவே புகார்கள் போயும், எந்த நடவடிக்கையும் இல்ல... 'இவர் காட்டிய கணக்கு, வழக்குகளை முறையா ஆடிட் பண்ணா, நிறைய தில்லுமுல்லுகள் வெளிவரும்'னு அனல்மின் நிலைய ஊழியர்களே சொல்றா ஓய்...'' என முடித்த குப்பண்ணா, ''சரி, கமலக்கண்ணன், நாளைக்கு பார்க்கலாம்...'' என்றபடியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.