/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மா.செயலர் பதவிக்கு ஆளின்றி அல்லாடும் பன்னீர் அணி!
/
மா.செயலர் பதவிக்கு ஆளின்றி அல்லாடும் பன்னீர் அணி!
மா.செயலர் பதவிக்கு ஆளின்றி அல்லாடும் பன்னீர் அணி!
மா.செயலர் பதவிக்கு ஆளின்றி அல்லாடும் பன்னீர் அணி!
PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

ப டித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, “கோசாலை கட்டுறதுல கோல்மால் நடக்கு வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த கோவில்ல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“திருப்பூர்ல இருக்கிற ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில்ல, 19 லட்சம் ரூபாய் மதிப்புல, பசு மாடுகளுக்கான கோசாலை கட்டும் பணி நடக்கு... ஏற்கனவே நல்லா இருந்த ஷெட்டை அகற்றிட்டு, கேரள மாடல்ல ஓடுகள் வேய்ந்த கூரையுடன் கோசாலை கட்டுதாவ வே...
“முதல்ல எடை கம்மியான இரும்பு ஆங்கிள்களை பொருத்தி, இரட்டை அடுக்கு ஓடுகளை பொருத்தினாவ... ஆனா, அதன் எடை தாங்காம கூரை சாய்ஞ்சு விழுந்துட்டு... இதனால, ஓடுகளை எல்லாம் இறக்கி வச்சிட்டு, வேற ஆங்கிள்களை மாட்டிட்டு இருக்காவ வே...
“இது பத்தி விசாரிச்சா, '19 லட்சம் ரூபாய் மதிப்பீடுன்னு வெளியில சொன்னாலும், எங்களுக்கு கிடைச்ச தொகை ரொம்பவே குறைவு... அதுக்கேத்த மாதிரி தானே நாங்க கூரை அமைக்க முடியும்'னு ஒப்பந்ததாரர் தரப்பு சொல்லுது... இந்த கோசாலையில அடைக்கப்படுற மாடுகளை அந்த பெருமாள் தான் காப்பாத்தணும் வே...” என்றார், அண்ணாச்சி.
“எந்த கூட்டணின்னு இன்னும் முடிவு எடுக்கலைங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடைசியா, 2011 - 16ல, ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,வா இருந்தாரு... அப்புறமா ரெண்டு தேர்தல்ல தோத்து போயிட்டாருங்க...
“இதனால, வர்ற தேர்தல்ல கண்டிப்பா ஜெயிச்சு, சட்டசபைக்குள்ள போயே ஆகணும்னு முடிவு பண்ணியிருக்காரு... அவரது கட்சியினர், 'எந்த கூட்டணியில் நாம சேர்றது'ன்னு கேட்டதுக்கு, 'ஜனவரி 7ல் மாநில மாநாடு நடத்துவோம்... அதுக்கு பிறகு கூட்டணி பத்தி முடிவு எடுக்கலாம்'னு சொல்லியிருக்காருங்க...
“அதுவரை கட்சியை பலப்படுத்தவும், தென் மாவட்டங்கள்ல வசிக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி அரசியல் செய்யவும் முடிவு பண்ணியிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“அவர், தொடர்ந்து தி.மு.க., அரசை விமர்சிக்கறதை பார்த்தா, அ.தி.மு.க., கூட்டணிக்கு தான் போவார்னு தெரியுது...” என்ற குப்பண்ணாவே, “மாவட்ட செயலரே இல்ல ஓய்...” என்றார்.
“எந்த கட்சியில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்திண்டு இருக்காரோல்லியோ... பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியும் இவரை கழற்றி விட்டுடுத்து ஓய்...
“இதனால, திக்கு தெரியாத காட்டுல நிக்கற மாதிரி முழிக்கறார்... இவரது அமைப்பில், கரூர் மேற்கு மாவட்ட செயலரா இருந்த, 'ஆயில்' ரமேஷ், தி.மு.க.,விலும், மாவட்ட துணை செயலரா இருந்த அய்யப்பன், அ.தி.மு.க., விலும் சேர்ந்துட்டா ஓய்...
“ஏற்கனவே, கரூர் கிழக்கு மாவட்ட செயலரா இருந்த கதிரேசன் பா.ஜ.,வுக்கு போய், அங்க இருந்து அ.தி.மு.க.,வுக்கும் போயிட்டார்... இப்ப, கரூர் மாவட்டத்துல பன்னீர்செல்வம் அணிக்கு மாவட்ட செயலர்களே இல்ல... யாரையாவது நியமிக்கலாம்னு பார்த்தா, யாரும் சிக்க மாட்டேங்கறா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.