PUBLISHED ON : ஆக 31, 2026 12:58 AM

ஆகஸ்ட் 31:
இசையமைப்பாளர் இளையராஜா - ஜீவா தம்பதியின் மகனாக, சென்னையில், 1979ல் இதே நாளில் பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா.
சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். ஜேக்கப் மாஸ்டரிடம் இசை பயின்றார். சென்னையில் உள்ள 'மியூசி மியூசிக்கல்' நிறுவனத்தில், லண்டன் டிரினிட்டி கல்லுாரியுடன் இணைந்த பியானோ வகுப்பில் பயிற்சி பெற்றார். தன் 16வது வயதில், அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தின், 'இரவா பகலா, சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே' உள்ளிட்ட பாடல்களால் பிரபலமடைந்தார். தொடர்ந்து, தீனா படத்தின், 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' பாடலால் ரசிகர்களிடம் செல்வாக்கு பெற்றார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன், புதுப்பேட்டை, பருத்தி வீரன், மாநாடு உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தன் பின்னணி இசைக்காக, 'பி.ஜி.எம்., கிங்' என புகழப்படும் இவர், 'ரீமிக்ஸ், ஹிப் ஹாப்' பாடல்களிலும் முத்திரை பதித்துள்ளார்.
'பிலிம்பேர்' மற்றும் தமிழக அரசு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு இன்று, 47வது பிறந்த தினம்!
