‘பில்’ பாக்கியால் அரசு அலுவலக கட்டட பணி நிறுத்தம்!
‘பில்’ பாக்கியால் அரசு அலுவலக கட்டட பணி நிறுத்தம்!
PUBLISHED ON : அக் 26, 2026 12:00 AM

“ல ட்சக்கணக்கில், ‘கட்டிங்’ கேட்கிறாரு பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“எந்த அதிகாரியை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“அதிகாரி இல்ல... துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் ஒரு கிராம நிர்வாக அலுவலர்... வி.ஏ.ஓ.,ன்னு சொல்றோமே... இவரிடம், பணத்தை, ‘வெட்டாம’ எந்த சான்றிதழும் வாங்கிட முடியாது பா...
“சமீபத்துல, ரெண்டு தரப்புக்கு இடையில பிரச்னை உள்ள நிலத்தை அளவீடு செஞ்சு பட்டா வழங்கும்படி ஒரு பெண், இவரை பார்த்து ஆவணங்களை எல்லாம் குடுத்தாங்க... அவரோ, ‘1 லட்சம் ரூபாய் குடுத்தா தான் பட்டா தருவேன்... இல்லாட்டி, எதிர் தரப்புக்கு சாதகமா செயல்படுவேன்’னு கறாரா சொல்லிட்டாரு பா...
“இதனால, கடும் மன உளைச்சல்ல வீட்டுக்கு போன அந்த பெண் மயங்கி விழுந்து, மருத்துவமனையில சேர்ந்து குணமாகி திரும்பியிருக்காங்க... இது சம்பந்தமா, கலெக்டரிடம் அந்த பெண் புகார் குடுத்தும், வி.ஏ.ஓ., மீது எந்த நடவடிக்கையும் இல்ல பா...” என்றார் அன்வர்பாய்.
“கண்ணன் உட்கார இடம் குடும் ஓய்...” என, பெஞ்சில் இடுக்கி உட்கார்ந்த குப்பண்ணாவே, “மாநகராட்சி பஞ்சாயத்தை கேளுங்கோ ஓய்...” என அடுத்த மேட்டரை தொடர்ந்தார்...
“கோவை மாநகராட்சி, தி.மு.க., வசம் இருக்கு... தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக்கின் மனைவி லக்குமி இளஞ்செல்வி, மாநகராட்சியில் மண்டல தலைவரா இருக்காங்க ஓய்...
“த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு, இவங்க மண்டலத்துல, எந்த வேலையும் நடக்கல... இது சம்பந்தமா இவங்க கணவர் கார்த்திக், சமீபத்துல மாநகராட்சியின் உயர் அதிகாரியை சந்திச்சு கேட்டிருக்கார் ஓய்...
“அதுக்கு அதிகாரி, ‘உங்க மண்டலத்துல எந்த பணிகளும் செய்யக்கூடாதுன்னு அரசு தரப்பில் யாரும் தடை போடல... அதிகாரிகளும் எல்லாத்தையும் செய்ய தயாரா தான் இருக்கா... ஆனா, உங்க கட்சியின் மாநகராட்சி முக்கிய புள்ளி தான் முட்டுக்கட்டை போட்டுண்டு இருக்காங்க’ன்னு வெளிப்படையா சொல்லிட்டார்...
“இதனால, ‘சொந்த கட்சிக்காராளே இப்படி சூனியம் வச்சா எப்படி’ன்னு, மண்டல தலைவர் தரப்பு குமுறிண்டு இருக்கு ஓய்...” என்றார் குப்பண்ணா.
தன் மொபைல் போனை பார்த்த அந்தோணிசாமி, ‘ரங்கநாயகி மேடத்தோட, ‘மிஸ்டு கால்’ இருக்கு... அப்புறம் பேசிக்கலாம்...’ என முணுமுணுத்தபடியே, “பில் தொகை தராததால கட்டுமான பணிகளை நிறுத்திட்டாங்க...” என்றார்.
“எந்த துறையில வே...” என கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
“பெரம்பலுார் மாவட்ட நகர் ஊரமைப்பு ஆபீசுக்கு தனி கட்டடம் இல்லாம, மாசம் 25 ஆயிரம் ரூபாய் வாடகையில இயங்கிட்டு இருக்கு... இதனால, 2.58 கோடி ரூபாய் மதிப்பில் புது கட்டடம் கட்ட, தி.மு.க., ஆட்சியில 2025 நவம்பர்ல அடிக்கல் நாட்டினாங்க...
“இந்த வருஷம் மே 3ம் தேதிக்குள்ள வேலையை முடிச்சு, கட்டடத்தை திறக்க முடிவு பண்ணியிருந்தாங்க... ஆனா, இதுவரை 95 சதவீதம் பணிகள் தான் முடிஞ்சிருக்குதுங்க...
“பெயின்டிங், எலக்ட்ரிக்கல், கார்பென்ட்ரி, பிளம்பிங் பணிகள் பாக்கியிருக்கு... இதுவரை செஞ்ச பணிகளுக்கான, ‘பில்’ தொகையை விடுவிக்காம, அதிகாரிகள் நிறுத்தி வச்சிருக்காங்க... இதனால, கட்டுமான நிறுவனம் பணிகளை நிறுத்திடுச்சு... பணிகள் தாமதம் ஆகிறதால, மக்கள் வரி பணத்தில் மாசம் 25 ஆயிரம் ரூபாய் வாடகைக்கே போகுதுங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்.
