/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
10 வருஷமாக மாற்றப்படாத பெண் அதிகாரிகள்!
/
10 வருஷமாக மாற்றப்படாத பெண் அதிகாரிகள்!
PUBLISHED ON : மார் 02, 2024 12:00 AM

''மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில சிக்கி, அதிகாரிகள் அல்லாடி போயிட்டாங்கல்லா...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமா தமிழகம் வந்தாருல்லா... முதல் நாள் சாயந்தரம் மதுரைக்கு வந்தாரு... அங்க, தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் மாநாட்டுல கலந்துக்கிட்டாரு வே...
''அதே நேரம், மாநில சுகாதாரத் துறை சார்புல, 342 கோடியில் மதுரை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்'ல திறந்து வச்சாரு...
''இதுல, அமைச்சர்கள் சுப்பிரமணியன்,மூர்த்தி எல்லாம் கலந்துக்கிட்டதால, அதிகாரிகள் அங்கயும் ஆஜரானாவ... ராத்திரி, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பிரதமர் போன நேரம், அமைச்சர் சுப்பிரமணியன் பிரஸ் மீட் வச்சாரு வே...
''இதனால, அதிகாரிகள் திணறி போயிட்டாவ... பிரதமர், முதல்வர், அமைச்சர் நிகழ்ச்சின்னு எதுக்கு முக்கியத்துவம் தர்றதுன்னு செய்தி மக்கள் துறை அதிகாரிகள் முழிபிதுங்கிட்டாவ...
'பிரதமர் நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யணும்னே, மாநில அரசு இந்த நிகழ்ச்சிகளை நடத்துச்சா'ன்னு பா.ஜ.,வினர், 'டவுட்' கிளப்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவி உயர்வு கிடைக்காம, பரிதவிக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தமிழக போலீஸ்ல, 1991ல் கிரேடு - 1 பதவிக்கு பெண் போலீசார் தேர்வு செய்யப்பட்டாங்க... இவங்க, பயிற்சிக்கு பின் நேரடியா ஸ்டேஷன் பணியில நியமிக்கப்பட்டாங்க பா...
''இப்ப இவங்க, எஸ்.ஐ.,க்களா இருக்காங்க... கிட்டத்தட்ட, 33 வருஷம் சர்வீஸ்ல இருக்கிற இவங்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கல பா...
''ஏட்டாக 5 வருஷம், எஸ்.ஐ.,யாக 10 வருஷம் பணிபுரிந்தாலும், 15 வருஷத்துல இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு தந்திருக்கணும்... ஆனா, இவங்களுக்கு அப்படிவழங்காம விட்டதால, சிலர் வெறுப்புல வி.ஆர்.எஸ்., வாங்கிட்டு போயிட்டாங்க பா...
''இப்ப, 300 எஸ்.ஐ.,க்கள் தான் இருக்காங்க... இவங்களும், 'ஓய்வு பெறும் முன், ஒரு நாளாவது இன்ஸ்பெக்டர் சீட்ல உட்கார்ந்துட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோட வலம் வர்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தேர்தல் கமிஷன் உத்தரவை காதுலயே போட்டுக்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''ஒரே இடத்துல, மூணு வருஷமா பணியில இருக்கற அதிகாரிகளை இடமாற்றம் பண்ணும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவு போட்டிருக்கோல்லியோ... ஆனா, பட்டுக்கு பிரசித்தி பெற்ற மாவட்டத்துல, உணவு பாதுகாப்பு அதிகாரியா இருக்கற பெண், 10 வருஷமா இங்கயே இருக்காங்க ஓய்...
''பக்கத்து மாவட்ட பொறுப்பையும் இவங்க தான் பார்த்துக்கறாங்க... ஆளுங்கட்சி ஆதரவு இருக்கறதால, இவங்களை மட்டும் மாத்தல ஓய்...
''இதே மாவட்டத்துல, வட்டார சுகாதார அதிகாரியா இருக்கற இன்னொரு பெண்ணும், ஒரே ஒன்றியத்துல, 10 வருஷமா இருக்காங்க...
இவங்க மேல ஏகப்பட்ட புகார்கள் இருந்தும், இயக்குனர் ஆபீஸ்ல முக்கிய அதிகாரிகள் சப்போர்ட் இருக்கறதால, அசைக்க முடியாத சக்தியா இருக்காங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''அனுராதா, அருள்மொழி ரெண்டு பேரும் ஸ்கூட்டர்ல எங்க வேகமா போறாங்க...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்தபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

