/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'உள்குத்து' வேலைக்கு தயாராகும் காங்கிரசார்!
/
'உள்குத்து' வேலைக்கு தயாராகும் காங்கிரசார்!
PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

''பில்டர் காபி குடும் நாயரே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணா, ''ஊதிய உயர்வு பட்டியலை அனுப்பவும் லஞ்சம் கேக்கறா ஓய்...'' என்றார்.
''எந்த துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் வேலை செய்யும் போலீசாருக்கு, ஆண்டுதோறும் ஊதிய உயர்வுக்கு பெயர் பட்டியலை தயார் செய்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவா... இது வழக்கமா நடக்கற, 'பிராசஸ்' தான் ஓய்...
''ஆனா, எந்த வருஷமும் இந்த பட்டியலை முறையா தயார் செய்து அனுப்ப மாட்டேங்கறா... இத்தனைக்கும் எல்லாத்தையும் கம்ப்யூட்டர்ல தான் பண்றா ஓய்...
''அப்படி இருந்தும், பட்டியல்ல பலரது பெயர்கள் விடுபட்டு போயிடறது... அவா போய், சம்பந்தப்பட்டவாளை பார்த்து, 'கட்டிங்' வெட்டுனா மட்டும் தான், ஊதிய உயர்வு பட்டியல்ல பெயர்களை சேர்த்து அனுப்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ராமநாதபுரம் கூத்தை கேளுங்க வே...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் பெரியசாமி அண்ணாச்சி.
''அங்க தானே ஓ.பி.எஸ்., போட்டியிடறார்...'' என, சந்தேகம் கேட்டார் குப்பண்ணா.
''ஆமா... அங்க ஓ.பி.எஸ்., சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள், அவருக்கு ஆதரவு தர்ற வகையில, தேர்தல் பணியில அடக்கி வாசிக்கிறதா, தலைமைக்கு புகார்கள் வந்துச்சு... அவரது பெயர்ல நிறுத்தப்பட்டுள்ள நாலஞ்சு சுயேச்சை வேட்பாளர்களுடைய சின்னம் தொடர்பான விளம்பரமும் தொகுதிகள்ல பெருசா இல்லன்னு பழனிசாமிக்கு புகார்கள் போச்சு வே...
''உடனே, மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் டோஸ் விட்டதும், எல்லாரும் சுறுசுறுப்பா களத்துல குதிச்சிருக்காவ.... பன்னீர்செல்வம் பெயர்ல நிற்கிற ஐந்து சுயேச்சைகளின் வாளி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட சின்னங்களை பெருசா போஸ்டர் அடிச்சு தொகுதி முழுக்க ஒட்டியிருக்காவ...
''இதுல, ஒரிஜினல் பன்னீர்செல்வத்தின் சின்னமான பலாப்பழத்தை விட, சுயேச்சை பன்னீர்செல்வங்களின் சின்னங்கள், இப்ப முன்னிலையில இருக்குன்னு பழனிசாமிக்கு, 'அப்டேட்' வந்திருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''தி.மு.க., மாவட்ட நிர்வாகி மீது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடும் கோபத்துல இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''மத்திய சென்னை தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபடாம வீட்டுலேயே முடங்கி கிடக்கிறாங்க... போதா குறைக்கு, அங்க நிற்கிற தே.மு.தி.க., வேட்பாளர் பலவீனமானவரா இருக்கிறதால, நமக்கு வெற்றி உறுதின்னு தி.மு.க., வேட்பாளரும் அசால்டாவே தொகுதியில வலம் வர்றாரு பா...
''அண்ணாநகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் பகுதி செயலரும் தான், காங்கிரஸ் நிர்வாகிகளை முடுக்கி விட்டு தேர்தல் பணியில ஈடுபடுத்துறாங்க... ஆயிரம் விளக்கு உள்ளிட்ட மற்ற சட்டசபை தொகுதிகள்ல இருக்கிற காங்., - வி.சி., - ம.தி.மு.க., ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகளை மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகி கண்டுக்கல பா...
''இதனால, அவங்க எல்லாம் கடும் கோபத்துல இருக்காங்க... அதுலயும் காங்., பிரமுகர்கள், மாவட்ட நிர்வாகிக்கு பாடம் புகட்டும் வகையில, 'உள்குத்து' வேலையை காட்டவும் முடிவு பண்ணிட்டாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

