PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: கவர்னர் ரவி
நியமிக்கப்பட்டது முதற்கொண்டு அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக,
தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார். மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்கும் வகையில் செயல்படும் பா.ஜ.,வின்
ஏஜன்ட்டான அவர், கவர்னர் பொறுப்பில் இருந்து உடனே விலக வேண்டும்.
அதெல்லாம்
இருக்கட்டும்... அதே கவர்னர் பதவி சம்பந்தமா, தி.மு.க., தேர்தல்
அறிக்கையில் சொல்லி இருக்கிற விஷயத்தை ராகுல் பிரதமர் ஆனால் காங்கிரஸ்
நிறைவேற்றுமா?
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சுகாதார துறையில் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருதை, தமிழகம் இதுவரை 614 முறை பெற்றுள்ளதோடு, சுகாதார துறை செயல்பாட்டில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, துறை அமைச்சர் சுப்ரமணியன் பெருமையாக குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், அதற்கான பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களின் நலனுக்காக, இதுவரை அவர் எதையுமே செய்யவில்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை, தமிழக அரசு டாக்டர்களுக்கு அதிகமா சம்பளம் கொடுத்தால், சரியா வேலை செய்ய மாட்டாங்கன்னு அமைச்சர் நினைக்கிறாரோ என்னமோ?
தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி: எதிரணியினர் அனைவரும் 'டிபாசிட்' இழக்கும் வகையில், லோக்சபா தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். பா.ஜ., தேசிய தலைவர்கள் யார் கோவைக்கு வந்தாலும், இங்கு அக்கட்சி டிபாசிட் இழக்கும். இரண்டாம் இடத்துக்கான போட்டி தான் கோவையில் கடுமையாக நடக்கிறது.
ஆளுங்கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத மாவட்டம் கோவை என்பதை மனதில் வைத்து, மறுபடியும் இவங்க கோட்டை விடாமல் இருந்தால் சரி!
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேச்சு: செந்தில் பாலாஜி கோவையில்நிறைய வேலைகள் செய்தார். இன்றும் கோவையை பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, அப்பணிகள் நம் நிர்வாகிகளால் செய்யப்பட்டது. தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம்.
கோவையில் ஒருவேளை தி.மு.க., வெற்றி பெற்றால், 'கிரெடிட்' மொத்தம் செந்தில் பாலாஜிக்கே சொந்தம்னு இவர் ஒப்புக் கொள்வாரா?

