/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'சீல்' வைத்த குவாரிகளில் மணல் கடத்தல்!
/
'சீல்' வைத்த குவாரிகளில் மணல் கடத்தல்!
PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

''கேட்ட பீர் கிடைக்க மாட்டேங்கறது ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணாவை, நண்பர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
''உமக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாதுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''வெயில் சுட்டெரிக்கறதால, மது குடிக்கறவா எல்லாம் இப்ப பீரை தான் விரும்பறா... திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்ல, 'குடி'மகன்கள் கேக்கற பிராண்ட் பீர்கள், கடைகள்ல கிடைக்க மாட்டேங்கறது ஓய்...
''இதனால, கடை ஊழியர்களுக்கும், அவாளுக்கும் தினமும் தகராறு நடக்கறது... இது சம்பந்தமா, மாவட்ட அதிகாரிகளிடம் ஊழியர்கள் முறையிட்டும், அவா கண்டுக்கல ஓய்...
''அதனால இப்ப, சென்னையில இருக்கற டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் புகார் அனுப்பியிருக்கா... 'நீங்க இங்க வந்து குடோன்கள்ல சரக்கு இருப்பை ஆய்வு பண்ணி, உண்மை நிலவரத்தை தெரிஞ்சுக்கணும்'னு கேட்டிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பூத் கமிட்டிக்கு தந்த பணத்தை முழுங்கிட்டாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவா பணியாற்ற, பூந்தமல்லி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த, தி.மு.க., பூத் கமிட்டிகளுக்கு குறிப்பிட்ட தொகையை, அந்த கட்சி மேலிடம் குடுத்திருக்கு வே...
''அந்த பணம், குறிப்பிட்ட, 15 பூத் கமிட்டிகளுக்கு மட்டும் கிடைக்கலையாம்... 'தலைமை தந்த பணத்தை அதே ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் சுருட்டிட்டாங்க'ன்னு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கிரிராஜன் எம்.பி.,யிடம், முன்னாள் நிர்வாகிகள் சிலர் புகார் தெரிவிச்சிருக்காவ...
''பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய தி.மு.க.,வுல, நிர்வாகிகள் ரெண்டு கோஷ்டியா செயல்படுறதால, தேர்தல் பணிகள்லயும் சுணக்கம் நிலவுது வே...'' என்றார், அண்ணாச்சி.
''சீல் வச்ச குவாரியில இருந்து மணல் கடத்துறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரியில், விதிகளை மீறி மணல் அள்ளியதா, 2023 நவ., 8ம் தேதி அமலாக்கத் துறையினர், 'ரெய்டு' நடத்தி, குவாரிக்கு சீல் வச்சுட்டாங்க பா...
''ஆனாலும், இந்த குவாரியில இருந்து அடிக்கடி மணல் கடத்தல் நடக்குது... போன மாசம் 29ம் தேதி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், கொள்ளிடம் போலீஸ் அதிகாரி உதவியுடன், ரெண்டு லாரி மற்றும் ஜீப்புல மணலை அள்ளிட்டு போயிருக்காரு பா...
''மறுநாள், ஏழு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலமா, 16 டாரஸ் லாரிகள்ல மணலை அள்ளிட்டு இருந்தப்ப, கிளிக்கூடு கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு, லாரிகளை சிறைபிடிச்சுட்டாங்க... அங்க வந்த நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், கிராம மக்களிடம் சமாதானம் பேசி, ஜே.சி.பி.,க்களை மீட்டு அனுப்பிட்டாங்க பா...
''நீர்வளத்துறை அதிகாரிகள், 'கோவை பள்ளி கட்டட பணிக்காக அரசு அனுமதியுடன் தான் மணல் எடுக்குறாங்க'ன்னு சொல்லி, 16 லாரிகளையும் மணலுடன் அனுப்பி வச்சுட்டாங்க... அந்த பகுதி மக்களோ, 'போன வருஷம் ஆகஸ்ட் மாசம் போட்ட உத்தரவை காட்டி, பள்ளி கட்டட பணிக்கு மணல் எடுக்கிறதா சொல்றாங்க... அமலாக்கத் துறை சீல் வச்ச இடத்துல, விதிகளை மீறி மணல் கடத்துறாங்க'ன்னு புகார் சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

