/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கவுன்சிலர் 'டார்ச்சரால்' ஓட்டம் பிடித்த பொறியாளர்!
/
கவுன்சிலர் 'டார்ச்சரால்' ஓட்டம் பிடித்த பொறியாளர்!
கவுன்சிலர் 'டார்ச்சரால்' ஓட்டம் பிடித்த பொறியாளர்!
கவுன்சிலர் 'டார்ச்சரால்' ஓட்டம் பிடித்த பொறியாளர்!
PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

''புறக்கணிக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனா இருக்கு ஓய்...'' என்றபடியே, பில்டர் காபியை உறிஞ்சினார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பொதுவா, மாவட்டத்துக்கு புதுசா வர்ற எஸ்.பி.,க்கள், குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கற மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்குரிய போலீஸ் ஸ்டேஷன்கள்ல ஆய்வு நடத்தி, அவற்றை குறைக்க போலீசாருக்கு அறிவுரை தருவா ஓய்...
''சிவகங்கை மாவட்ட எல்லையில, திருபுவனம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு... தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர், இமானுவேல் சேகரன் நினைவு நாட்கள் வரும்போது, இந்த ஸ்டேஷன் எல்லையில நிறைய பிரச்னைகள் நடக்கும் ஓய்...
''இதை ஒட்டியிருக்கற திருப்பாச்சேத்தி ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆல்வின் சுதன், மருதுபாண்டியர் நினைவு நாள் சமயத்துல தான் கொலை செய்யப்பட்டார்... வைகை ஆற்றை ஒட்டிய ஊரா வேற இருக்கறதால, மணல் கொள்ளைக்கும் பஞ்சமில்ல ஓய்...
''ஆனா, இந்த ஸ்டேஷனுக்கு எந்த எஸ்.பி,யும் ஆய்வுக்கு வந்ததே இல்ல... இதுக்கு முன்னாடி இருந்த அரவிந்தனும் சரி, இப்ப இருக்கற டோங்கரே பிரவீன் உமேஷும் சரி, திருப்புவனம் பக்கம் எட்டிக் கூட பார்க்கல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஜெயில்ல இருந்தாலும், முழு செலவுகளையும் ஏத்துக்கிட்டாரு பா...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அன்வர்பாய்.
''யாரு வே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருச்சியில முதல்வர் ஸ்டாலின், முந்தாநாள் பிரசாரம் துவங்கினாரே... இதுலயே, வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தினாரே பா...
''அமைச்சர் நேரு மகன் அருண் போட்டியிடும் பெரம்பலுார் தொகுதிக்குள்ளே கரூர் மாவட்டம், குளித்தலை சட்டசபை தொகுதியும் வருது... முதல்வர் பிரசார கூட்டத்துக்கு ஆட்களை திரட்டவும், வாகனங்கள், சாப்பாடு செலவுக்கும் திருச்சி, பெரம்பலுார் மாவட்ட சட்டசபை தொகுதிகளின் முக்கிய புள்ளிகளுக்கு, ஒரு தொகையை, கட்சி சார்புல குடுத்திருக்காங்க பா...
''ஆனா, குளித்தலை தொகுதியின் முக்கிய புள்ளி மட்டும் கவனிப்பை வேண்டாம்னு மறுத்துட்டாராம்... காரணம், ஜெயில்ல இருக்கும் கரூர் மாவட்ட செயலர் செந்தில் பாலாஜி, எல்லா செலவுகளையும் தானே ஏத்துக்கிறதா சொல்லிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''கவுன்சிலர் டார்ச்சர் தாங்காம ஓடியே போயிட்டாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னைக்கு பக்கத்துல ஒரு நகராட்சி இருக்குதுங்க... ஒரு காலத்துல ஆவேசமா பேசிய தலைவரின் கட்சியைச் சேர்ந்த பெண் தான், சேர்மனா இருக்காங்க... இவங்க கணவர், அதே நகராட்சியில கவுன்சிலரா இருக்காருங்க...
''ஆனா, இவர் தான் சேர்மன் மாதிரி செயல்படுறாருங்க... எல்லா டீலிங்குகளையும் இவர் தான் கவனிக்கிறாருங்க... இவரது கட்சி, ஆளுங்கட்சி கூட்டணியில இருக்கிறதால, அதிகாரிகளும் இவரை எதிர்த்து எதுவும் பேச மாட்டேங்கிறாங்க...
''சமீபத்துல, தன் பேச்சை கேட்காத நகராட்சி பொறியாளர் ஒருத்தரை, எல்லார் முன்னாடியும் ஒருமையில திட்டி தீர்த்துட்டாருங்க... இதனால, நொந்து போன பொறியாளர் ஒரு வாரம் லீவுல போனாரு... போனவர், போனவர் தான்... அப்படியே வேற இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு போயிட்டாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''மாங்காடு வரை போகணும்... கிளம்பறேன்ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

