/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
வேலாண்டிபாளையத்தில் எல்லாமே பிரச்னைமயம்; அதிகாரிகள் மனது வைத்தால் தீர்வு கிடைக்கும்
/
வேலாண்டிபாளையத்தில் எல்லாமே பிரச்னைமயம்; அதிகாரிகள் மனது வைத்தால் தீர்வு கிடைக்கும்
வேலாண்டிபாளையத்தில் எல்லாமே பிரச்னைமயம்; அதிகாரிகள் மனது வைத்தால் தீர்வு கிடைக்கும்
வேலாண்டிபாளையத்தில் எல்லாமே பிரச்னைமயம்; அதிகாரிகள் மனது வைத்தால் தீர்வு கிடைக்கும்
ADDED : ஜூலை 14, 2025 11:30 PM

மின்ஒயர்களில் உரசும் கிளைகள்
கோவைப்புதுார், 90வது வார்டு, 'கியூ' பிளாக் பகுதியில், ராகவேந்திரா கோவில் அருகில், உயர் அழுத்த மின்சார ஒயர்கள் மீது மரத்தின் கிளைகள் உரசிக்கொண்டுள்ளது. சில சமயங்களில் ஒயர்கள், கிளைகள் உரசி, தீப்பொறி வருகிறது. மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஹரிகரன், கோவைப்புதுார்.
வெளிச்சமில்லை... ரோடும் சரியில்லை
சங்கனுார், 18வது வார்டு, லட்சுமி நகர் விரிவாக்கம், புது சுப்பம்மாள் நகரில், தெருவிளக்கு மற்றும் தார் ரோடு வசதியில்லை. கடும் இருளால், இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியவில்லை. மோசமான சாலையால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்பகுதியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாகராஜ், சங்கனுார்.
அதிகரிக்கும் விபத்துகள்
துடியலுார், வடமதுரை அருகே சீரமைப்பு பணிக்காக, சாலை நடுவே இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. சில வாகனஓட்டிகள் மறுபுறம் உள்ள சாலைக்கு செல்ல, நினைத்த இடத்தில் திரும்புகின்றனர். இப்படி வாகனங்கள் செல்வதால், விபத்து அதிகரிக்கிறது. விரைந்து தடுப்புகளை அமைக்க நடவடிக்கை வெண்டும்.
- சந்திரசேகர், வடவள்ளி.
இரண்டு வரிசை பார்க்கிங்
கணபதி, விஸ்வநாதபுரம், நான்காவது வீதியில், சாலையில் இரண்டு வரிசையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகளின் வாகனங்களை வெளியே எடுப்பதற்கேமிகவும் சிரமமாக உள்ளது. வாகனபார்க்கிங்கால் குறுகிப்போன சாலையில், பள்ளி வேன், கார் போன்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.
- சிவக்குமார், கணபதி.
தெருவிளக்கு பழுது
போத்தனுார், 99வது வார்டு, மேட்டுத்தோட்டத்தில், ' எஸ்.பி -32, பி -9' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. தெருவிளக்கு பழுதால், குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.
- அருள், போத்தனுார்.
கடும் துர்நாற்றம்
இடையர்பாளையம், சரவணா நகர், ஆதித்யா அவென்யூவில், கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவில்லை. கால்வாயில் கழிவுநீர் தேங்கி, அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் உள்ளது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஹரிஷ், இடையர்பாளையம்.
இருளால் அச்சம்
ராமநாதபுரம், 64வது வார்டு. அல்வேர்னியா பள்ளி எதிரே, சாமா லேஅவுட் பகுதியில், 'எஸ்.பி -39 பி -8' என்ற எண் கொண்ட கம்பத்தில், தெருவிளக்கு எரியவில்லை. மாலை நேரத்தில்டியூசன் முடிந்து வரும் மாணவர்கள், பணி முடிந்து வரும் பெண்கள், அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
- ராஜா, ராமநாதபுரம்.
அடிப்படை வசதிக்கே அல்லல்
வேலாண்டிபாளையம், 42வது வார்டு, நல்லம்மாள் வீதியில், சாக்கடை கால்வாய் இடிந்த நிலையில், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஐந்துக்கு மேற்பட்ட கம்பங்களில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. மோட்டார் பழுது காரணமாக, உப்பு தண்ணீரும் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை. அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- லதா, வேலாண்டிபாளையம்.
பதம்பார்க்கும் கம்பிகள்
மத்திய மண்டலம், 76வது வார்டு, தயிர் இட்டேரி ரோடு, கண்ணப்பன் நகர் பாலம் அருகே, சாலை நடுவே கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டுள்ளன. வாகனங்களின் டயர்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.
- சாதனா, கண்ணப்பன் நகர்.
ஆமை வேகத்தில் பணிகள்
மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனியில் மார்ச் மாதம் துவங்கிய பாலம் கட்டுமான பணிகள் இன்னும் முடிக்கவில்லை. அவசர தேவைகளுக்குக்கூட செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை வேண்டும்.
- உமாசங்கர், ஐ.ஓ.பி., காலனி.
குப்பைமேடாகும் தடுப்பணை
கணுவாய் தடுப்பணை முழுவதும் குப்பையாக உள்ளது. குப்பை அகற்றப்பட்ட பின்பும், மீண்டும் மீண்டும் குப்பை கொட்டப்படுகிறது. சில இடங்களில் குப்பையை தீயிட்டும் கொளுத்துகின்றனர். குப்பை மேடாக மாறிவரும் தடுப்பணையை, சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.
- ஆறுமுகம், கணுவாய்.
பள்ளத்தால் விபத்து
பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே சாலை வளைவில் பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளன. வளைவில் திரும்பும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன/ வெறும் மண் கொண்டு மூடுவதால், மழையில் மண் அரித்து மீண்டும் குழியாகிறது. பள்ளங்களை தார் கொண்டு மூட வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.