/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் இருக்கு!
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் இருக்கு!
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் இருக்கு!
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் இருக்கு!
PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

அன்றாட உணவு வகைகளில் கலந்து, எளிதாக பயன்படுத்தும் விதமாக, 13 வகையான கீரைகளில், 'ரெடிமிக்ஸ்' தயார் செய்து, 'தினசரி கீரை' என்ற பெயரில் விற்பனை செய்து வரும், திருச்சியைச் சேர்ந்த லட்சுமி பிரியா:
திருச்சி தான் சொந்த ஊர். எனக்கு இரு குழந்தைகள். சத்தான உணவுகள் கொடுத்து, ஆரோக்கியமாக வளர்க்க ஆசைப்பட்டேன். தினமும் ஒரு கீரை வகையை சமைத்து கொடுத்தேன்; ஆனால், சாப்பிட மறுத்து, அடம் பிடித்தனர்.
அதனால், கீரைகளை நிழலில் உலர்த்தி, மிக்சியில் பொடியாக்கி, அதில் பருப்பு, மிளகு உள்ளிட்ட சில பொருட்களை கலந்து, ரெடிமிக்ஸ் தயார் செய்து கொடுத்தேன்; குழந்தைகள் விரும்பி சாப்பிட்டனர்.
கீரை ரெடிமிக்ஸை உறவினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுக்க, அவர்களுக்கும் பிடித்துப் போய், பின் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்தனர்.
இதை ஒரு தொழிலாகவே செய்யலாம் எனக் கருதி, 2018ல் ஆரம்பித்தோம். உடனேயே எங்களது தயாரிப்புக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்றும் வாங்கினோம்.
எங்கள் வீட்டின் மாடித்தோட்டத்தில், 13 வகையான கீரைகள் உற்பத்தி செய்து, பலவிதமான ரெடிமிக்ஸ்கள் தயார் செய்து, மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், இயற்கை அங்காடிகள், சித்த மருத்துவமனைகளை அணுகி, விற்பனை செய்ய ஆரம்பித்தோம். படிப்படியாக விற்பனை அதிகரித்தது.
அதிக அளவு கீரைகள் தேவைப்பட்டதால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக பல பகுதிகளில் இருந்தும், இயற்கை விவசாயிகளிடம் இருந்தும் கீரைகள் கொள்முதல் செய்ய ஆரம்பித்தோம்.
எந்த ஒரு ரசாயன இடுபொருளும் பயன்படுத்தாமல் தான், கீரை சாகுபடி செய்கின்றனர் என, பலவிதங்களில் உறுதிப்படுத்திய பின்தான், கொள்முதல் செய்கிறோம்.
எங்கள் ரெடிமிக்ஸை இட்லி, தோசை மாவு மற்றும் சப்பாத்தி மாவில் கலந்தும் பயன்படுத்தலாம்; சாதத்தில் போட்டு, நெய் கலந்தும் சாப்பிடலாம்; சுடுநீரில் கலந்து, உப்பு சேர்த்து, 'சூப்' ஆகவும் பயன்படுத்தலாம்.
கீரைகளை நன்கு உலர வைக்க, 2021ல் சோலார் டிரையர் அமைத்தோம். உலர் கீரைகளை அரைத்து பொடி செய்ய அரவை இயந்திரம், பருப்பு, மிளகு உள்ளிட்டவற்றை அரைக்க, 'ரோஸ்டர்' இயந்திரம், நவீன பேக்கிங் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் வாங்கினோம். எல்லா செலவுகளும் போக மாதம், 50,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும், கீரை ரெடிமிக்ஸ் வகைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுஇருக்கோம். இதற்காக, மண்ணச்சநல்லுார் பகுதியில் ஒரு தொழிற்சாலை கட்ட இருக்கிறோம். அதற்கு, 35 லட்சம் ரூபாய் கடன் தர, வங்கி சம்மதம் தெரிவித்துள்ளது.
தொடர்புக்கு:
96599 40016.

