PUBLISHED ON : அக் 27, 2026 12:00 AM

மனைவி பிரிந்து சென்ற நிலையில், ஒற்றை ஆளாக மகனை வளர்த்து ஆளாக்கியுள்ள ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்:
சத்தியமங்கலம், புளியம்பட்டி அருகில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கிறோம். பெரியவர்கள் பார்த்து எனக்கு திருமணம் செய்து வைத்தனர். 10 ஆண்டுகள் நானும், மனைவியும் ஒன்றாக வாழ்ந்தோம். அதன்பின் நிறைய கருத்து வேறுபாடுகள் வர ஆரம்பித்ததால், ‘சேர்ந்து வாழ விருப்பம் இல்லை’ என்று இருவரும் பிரிந்து விட்டோம்.
அதன்பின் இரண்டு நாள் கழித்து, ‘அம்மா எங்கேப்பா?’ன்னு என் 8 வயது மகன் விஜய் கேட்டான். ‘இனி நீயும், நானும் தான் சாமி’ன்னு சொன்னேன். ‘சரிப்பா’ன்னு மட்டும் சொன்னான். அதன்பின், இன்று வரைக்கும் அதுகுறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்டதில்லை.
எங்கம்மா என்னுடைய சிறு வயசிலேயே தவறிட்டதால, எனக்கு திருமணத்திற்கு முன்னாடியே சமைக்கத் தெரியும். அதனால், இரண்டு வேளைக்கும் சமைத்து வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி விடுவேன். வீடு திரும்ப இரவு 10:00 மணியாகிடும். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் சமைப்பேன்; முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது.
‘இன்னொரு திருமணம் செய்து கொள்’ என்று சிலர் கூறினர். முதலில் எனக்கும் அப்படியொரு எண்ணம் இருந்தது. ஆனால் நண்பர் ஒருவர், ‘இன்னொரு கல்யாணமெல்லாம் வேண்டாம். இனி உன் பையனோட வாழ்க்கையை யோசி... அவனை வளர்த்து ஆளாக்கிட்டா, நாளைக்கு அவன் உன்னை நல்லபடியா பார்த்துப்பான்’னு சொன்னார். அந்த நிமிடமே என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
மகன் அரசு பள்ளியில் தான் படித்தான்; நன்கு படித்து இன்று ஒரு கம்பெனியில நல்ல வேலையில் இருக்கிறான். ‘நீங்க உழைச்சது போதும், இனி வேலைக்கு போக வேண்டாம்’னு சொல்லி விட்டான்.
ஆணோ, பெண்ணோ, தனக்குன்னு ஒரு வேலையை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும்; சேமிப்பும் மிகவும் முக்கியம். குழந்தைகளுக்கு நல்ல நட்பு வட்டம் இருக்க வேண்டும்; என் மகனுக்கு நல்ல நண்பர்கள் அமைந்தனர். அம்மா இல்லாத குறை தெரியாமல் அவன் வளரவும், நன்கு படிக்கவும், அந்த நட்பு தான் காரணம்.
பிள்ளைகள் படிக்கும் பள்ளியுடன் பெற்றோர் தொடர்பில் இருக்கணும். அந்த சூழல் எப்படி இருக்கு, தினசரி வாழ்க்கையில் என்னென்ன நடக்குதுன்னு பிள்ளைங்ககிட்ட நிறைய பேசணும்; நேர்மையாகவும் நம்பிக்கையோடும் பேசணும்... மற்ற எல்லாவற்றையும் காலம் கவனித்து கொள்ளும்.
