PUBLISHED ON : டிச 30, 2025 03:16 AM

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
விவசாயி செல்லப்பன்:
விவசாயிகளுக்கு நஷ்டம் கொடுக்காத பயிர் என்றால், அது சோளம் தான். மானாவாரி நிலங்களில், மழையை நம்பி சோளம் விதைப்போம்.
நான் கிணற்று பாசனத்தில் தான் சோளம் விளைவிக்கிறேன். ஒரு போகமாவது சோளம் பயிரிட்டால் தான், அந்த சோள தட்டைகளை நாம் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு ஆண்டு முழுதும் தீவனமாக கொடுக்க முடியும். ஒரு போக சோளத்தில் வரும் லாபத்தில், அடுத்த விதைப்புக்கு முதலீடு செய்யலாம்.
சோளத்தையும், நெல் போல் பாதுகாத்து வளர்த்தால் மட்டுமே நன்றாக வளரும். ஒரு முறை களை எடுத்தால் போதும். வாரம் ஒரு முறை தண்ணீர் விடுவேன். இடையில் மழை வந்தால், ஒரு வாரத்திற்கு தண்ணீர் விட தேவையில்லை.
யூரியா போட மாட்டேன்; பூச்சி மருந்து தெளிக்க மாட்டேன். கிணற்று தண்ணீரில் வளரும் சோளத்திற்கு, இதெல்லாம் தேவையில்லை. 60வது நாளில் கதிர் வந்து விடும். அறுவடைக்கு, 10 நாட்களுக்கு முன் மழை பெய்தால், சோளம் ஜொலிக்கும்.
என்ன தான் நாம் கிணற்று நீர் பாய்ச்சினாலும், மழை நீர் என்பது உயிர் நீர். அதில் இருக்கும் சத்து, வேறு எதிலும் இல்லை. இப்படி வளரும் சோளத்தை, 100வது நாளில் அறுவடை செய்து
விடலாம்.
நான், 2 ஏக்கரில் சோளம் பயிரிடுகிறேன். அது நன்கு விளைந்தால், 1,000 கிலோ சோளம் கிடைக்கும்.
கடைகளில் கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். 1,000 கிலோ சோளத்தில், 40,000 ரூபாய்; சோளத்தட்டைகள் விற்பனையில், 5,000 ரூபாய் என மொத்தம், 45,000 ரூபாய் கிடைக்கும்.
சாகுபடி செலவுகள், 15,000 ரூபாய் போக, 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய வேலை இல்லாமல், சிரமமில்லாமல் சோளம் விளைவித்து, 100 நாட்களில் லாபம் பார்க்கலாம்.
வரும் சித்திரையில் கோடை மழை பெய்யும். விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலம் வைத்திருப்பவர்கள் ஒரு முறை மழை பெய்ததும், உழவு ஓட்டி தயாராக வேண்டும். அடுத்த மழை பெய்ய போகிறது என்று தெரிந்தால், விதைகளை துாவி, உழவு ஓட்டினால், அடுத்த மழைக்கு நிச்சயம் விதை முளைத்து பயிர்கள் வரும்.
சோளம் விதைத்தால், மழை இல்லையென்றால் கூட விளைந்த வரைக்கும் ஆடு, மாடுகளுக்கு தீவனமாகி விடும். கால்நடை தீவனம் கிடைப்பதால், அதுவும் விவசாயத்தால் வந்த வருமானம் தானே!
சோளம் விதைத்தால், விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் லாபம் வரும்.

