PUBLISHED ON : மே 20, 2026 12:05 AM

சொந்த செலவில் பள்ளிகளுக்கான கட்டடங்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், பண்ணந்துாரை சேர்ந்த, 83 வயதான அனுசுயா பாய்:
எனக்கும், என் கணவர் பால்ராம் சிங்குக்கும் சிறு வயதிலேயே கல்வி கிடைக்கவில்லை. ஏனெனில், நாங்கள் வளர்ந்த சூழ்நிலை அந்த மாதிரி இருந்தது. அப்போது இருந்த வறுமையான சூழல், எங்களை முடக்கி இருந்தது.
என் கணவர் தையல்காரராகத் தான் வாழ்க்கையை துவக்கினார். அப்படியே படிப்படியாக முன்னேறி, ஜவுளி வியாபாரத்தில் பெரிய இடத்துக்கு வந்து விட்டோம்.
வசதி வந்ததும், ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து, சிறுசிறு உதவிகள் செய்ய ஆரம்பித்தோம்.
அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு சீருடை கொடுத்தோம். ஒருகால கட்டத்தில், எங்கள் ஊர் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை வந்தபோது, என் கணவரே, 10 ஆசிரியர்களை நியமித்து, தன் சொந்த பணத்தில் சம்பளம் கொடுத்தார்.
என் கணவர், 11 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பில் இறந்து விட்டார். அந்த கடைசி நேரத்திலும் கூட, ஒரு ஏழை சிறுவனை பள்ளியில் சேர்க்க, தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகத்திற்கு அலைந்து அனுமதி வாங்கி வந்தார்.
அவர் உயிருடன் இருக்கும்போது என்னென்ன உதவிகள் செய்தாரோ, அதை எல்லாம் நானும் செய்து வருகிறேன்.
இப்போதும் ஜவுளி தொழிலிலும், கல்வி பணிகளிலும் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். உழைக்காமல் சும்மா இருக்க எனக்கு பிடிக்காது. அதனால், இப்போதும் அந்த சுறுசுறுப்பை விடவில்லை.
பண்ணந்துாரில் இருக்கும் பள்ளிக்கு, என் 50 சவரன் நகைகளுடன், எங்கள் நிலத்தை விற்று கட்டடம் கட்டிக் கொடுத்தேன். இன்றைக்கு, அந்த நிலத்தின் மதிப்பு மட்டும், 35 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்கின்றனர்.
இப்போது அது, 'ப.ப.அனுசுயா பாய் பால்ராம்சிங் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி' என்று எங்கள் பெயரில் இயங்குகிறது.
என் கணவர் இருந்திருந்தால் இதையேதான் செய்திருப்பார். அவர் இடத்தில் இருந்து, அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நான் பஞ்சாயத்து தலைவராக இருந்தபோதும் , என் கடமையை பொறுப்புடன் செய்துள்ளேன். அப்போதும், பொது செலவுக்கு பணம் தேவைப்பட்டால், என் சொந்த பணத்தை செலவு செய்ய தயங்கியதில்லை.
'கல்வி பணியில் சிறப்பான சேவை' என்று தமிழக அரசு விருது கொடுத்து என்னை கவுரவித்தது. அந்த விருதை நான் வாங்கியபோது, 'நமக்கு இன்னும் பொறுப்பு இருக்கு' என்று உணர்த்தியதாகத்தான் நினைக்கிறேன்.
தொடர்புக்கு: 96004 95947.
