/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பால் வியாபாரத்தில் பல மடங்கு மனநிறைவு!
/
பால் வியாபாரத்தில் பல மடங்கு மனநிறைவு!
PUBLISHED ON : ஜன 14, 2026 03:40 AM

மாடு வளர்ப்பு தொழிலில் சாதிக்கும், சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த, 33 வயதாகும் முனைவர் சண்முகக்கனி: எங்கள் பூர்வீகம் துாத்துக்குடி. ஆனாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான். எனக்கு படிப்பில் அதீத ஆர்வம். அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளேன்.
முனைவர் பட்டம் பெற்று, தனியார் பொறியியல் கல்லுாரியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருமணம் முடிந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன.
என் புகுந்த வீடு, கூட்டுக் குடும்பம். வீட்டின் பால் தேவைக்காக மட்டுமே மூன்று மாடுகள் வைத்திருந்தனர். இப்போதைய சூழலில், குழந்தைகளுக்கு செல்வத்தை சேமிப்பதை விட, ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இயற்கையான முறையில், எந்த ரசாயனங்களும் சேர்க்காத ஆரோக்கியமான பாலை என் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, அதை மற்ற குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று விரும்பி, பால் வியாபாரம் செய்யலாம் என்ற விருப்பத்தை வீட்டில் தெரிவித்தேன்.
அப்படி ஆரம்பித்தது தான் பாலும், பால் சார்ந்த பொருட்களின் விற்பனையும்.
எங்கள் பாலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மாடுகள் எண்ணிக்கை வளர வளர வியாபாரமும் வளர்ந்தது. தற்போது எங்களிடம், 50 மாடுகள் இருக்கின்றன.
எங்கள் வீட்டின் முன் அரவை இயந்திரம் வைத்து, அதில் எங்கள் மாடுகளுக்கான தீவனத்தையும் அரைத்துக் கொள்கிறோம்.
நாள் ஒன்றுக்கு, 175 லிட்டர் பால் விற்பனை செய்கிறோம். எஞ்சியிருக்கும் பாலை மதிப்புக்கூட்டி பல பொருட்கள் தயாரிக்கிறோம்.
வீட்டின் முன் கடை வைத்து விற்பனை செய்கிறோம். வரவேற்பு நன்றாக இருப்பதால், விரைவில் சந்தைக்கு கொண்டு வரும் திட்டமும் உள்ளது.
பால் விற்பனை அல்லாமல், பால் சார்ந்த பொருட்களில் மாதம், 1.60 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. செலவுகள் எல்லாம் போக, 40 சதவீதம் வரை லாபம் கிடைக்கிறது.
'முனைவர் பட்டம் பெற்று விட்டு மாடு வளர்ப்பா?' என்று ஏளனமாக கேட்டவர்கள் பலரும், இன்று, 'எந்த மாடு வாங்கினால் லாபம் கொடுக்கும், எப்படி வளர்ப்பது' என்று தொழில் குறிப்புகளை என்னிடம் கேட்கின்றனர்.
இதில் பல மடங்கு திருப்தியும், மனநிறைவும் எனக்கு கிடைக்கிறது. அதைவிட என் குடும்பத்தினருடன் நாள் முழுதும் செலவிடுகிறேன்; இதை விட வேறு என்ன வேண்டும்?

