/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
குறைந்த லாபம் அதிக ஆர்டர் தான் 'சக்சஸ் பார்முலா!'
/
குறைந்த லாபம் அதிக ஆர்டர் தான் 'சக்சஸ் பார்முலா!'
PUBLISHED ON : ஜன 28, 2024 12:00 AM

'சரஸ்வதி கேட்டரிங்' நிறுவன உரிமையாளர் சுப்பிரமணி: என் தாத்தாவும், அப்பாவும் சமையல் கலைஞர்கள். நான் பள்ளி படிப்பைக்கூட முடிக்கவில்லை.
சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், சொக்கநாதபுரம் கிராமத்தில், ஹோட்டல் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் சப்ளையராக வேலை செய்தேன்.
பின், காய்கறிகள் நறுக்கிக் கொடுப்பது, சமையல் உதவியாளர், சமையல் கலைஞர் என, படிப்படியாக தொழிலைக் கற்றுக்கொண்டேன்.
ஒரு கட்டத்தில், அப்பாவிற்கு உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் சார்பாக சமையல் வேலைகளைக் கவனிக்க சென்னை வந்தேன்.
கேட்டரிங் நிறுவனங்கள் உருவெடுக்காத காலம் அது. நானும், என் நண்பரும் சேர்ந்து, 1980களின் துவக்கத்தில் இந்த நிறுவனத்தை துவங்கினோம்.
வாடிக்கையாளர்கள் எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, முன்பணத்துடன், 'ஆர்டர்' கொடுத்தனர். சொற்ப லாபம் வைத்து, தொழிலில் எங்களை நிலைநிறுத்திக் கொண்டோம்.
தொழிலையும், பண விஷயத்திலும் நாணயத்தைக் கடைப்பிடித்ததால், எங்களை நம்பி கடன் கொடுக்க பலரும் முன்வந்தனர். அதனால், நிறுவனத்தை வளர்த்தெடுக்க முதலீட்டுக்கு சிரமம் ஏற்படவில்லை.
எங்கள் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் தான் காரணம். அதனால், எந்த வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஒரே வித அணுகுமுறை மற்றும் தரத்தில் தான் உபசரிப்புகளை கவனிப்போம்.
குறித்த நேரத்துக்கு முன்னரே உணவுகளை தயார் செய்து, தரத்தை பலமுறை பரிசோதிப்போம். முந்தைய தலைமுறையினரிடம் கற்றது மட்டுமல்லாமல், என் சமையல் குழுவினருடன், புதுமையான ரெசிப்பிகளை அறிமுகப்படுத்துவதிலும் தனி கவனம் செலுத்துவோம்.
கூடுதலாக எத்தனை பேர் வந்தாலும் தரமும், சுவையும் குறையாத வகையில், உடனுக்குடன் சமைத்துக் கொடுப்போம்.
'எந்த வேலை செய்தாலும், அதை நேர்த்தியாக செய்யணும்'னு சொல்லி வளர்க்கப்பட்ட எங்கப்பா, அதன்படி நடக்கணும்னு என்னிடம் வலியுறுத்தினார்.
பணம் சம்பாதிப்பதை தாண்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது நோக்கமாக இருந்தாலே, நமக்கானது எல்லாமே தானாக கிடைக்கும்.
மக்கள் வயிறார சாப்பிடணும்; மனதார வாழ்த்தணும். இதனுடன், குறைந்த லாபம், அதிகமான ஆர்டர்கள் இந்த கொள்கை தான் எங்கள், 'சக்சஸ்' பார்முலா.
போட்டிகள் இருந்தால் தான் தொழில் நன்கு வளரும். எங்கள் நிறுவனத்தை நம்பி, நுாற்றுக்கணக்கானோர் வேலை செய்கின்றனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதும் எங்கள் கடமை தான். இந்தப் பொறுப்பும், எங்கள் மீது பலர் வைத்திருக்கும் நம்பிக்கையும், பல தலைமுறைக்கு எங்களை நம்பிக்கையுடன் உழைக்க வைக்கும்.
***********
600 கன்டெய்னர் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம்!
'அபெக்ஸ் மேட்ச் கன்சோர்ட்டியம்' என்கிற பெயரில் தீப்பெட்டி உற்பத்தி செய்து வரும் சரண்யன்:என் சொந்த ஊர் சிவகாசி. எங்கள் குடும்பத்தில், தீப்பெட்டி வியாபாரத்துக்கு முன்னோடியாக திகழ்ந்தவர், என் அப்பா.
செல்வம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல, குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் உயர்த்த வேண்டும் என என்னை சிந்திக்க வைத்தது, அவரின் தொலைநோக்குப் பார்வை. பட்டப்படிப்பை முடித்த பின், அப்பா நடத்தும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் சேர்ந்தேன்.
தொழிலின் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட போது, சக தொழிலதிபர்களுடன் பழகி, நேர்மறையான உறவுகளை வளர்த்துக் கொண்டேன்.
நானும், என் பார்ட்னர் சஜீவ் மற்றும் ஆறு தொழில் முனைவோர்கள் இணைந்து செயல்பட முடிவு செய்தோம். தீப்பெட்டிக்கான ஆர்டர்களை உலகம் முழுக்க சென்று வாங்கி வருவது, வந்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு செய்வது, தனிப்பட்ட முறையில் லாபம் அடைய நினைக்காமல், ஒவ்வொருவருக்கும் எந்த வேலையை நன்கு செய்ய முடியுமோ, அந்த வேலையைச் செய்வது என முடிவு செய்து, 'அபெக்ஸ்' என்கிற பெயரில், ஒரு நிறுவனத்தை துவங்கி, கூட்டாக செயல்படத் துவங்கினோம்.
இந்தக் கூட்டு முயற்சியை நாங்கள் துவங்கியவுடன், பிசினஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது.
'கிளஸ்டர்' முறையில் செயல்படுவதால், எல்லா நிறுவனங்களுக்கும் ஒருவரே சென்று ஆர்டர் வாங்குவது, மொத்த கொள்முதல் மற்றும் அதிக சிக்கனமான விலையில் மூலப்பொருட்களை வாங்குவது மற்றும் மொத்தமாக பொருட்களை அனுப்புவதன் வாயிலாக போக்குவரத்துச் செலவுகளை மேம்படுத்துவது போன்ற பல நன்மைகள் கிடைத்தன.
இன்று உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தீப்பெட்டியை ஏற்றுமதி செய்து வருகிறோம். தரமான தீப்பெட்டிகளைத் தயாரித்து தருவதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின் ஆதரவை நாங்கள் என்றென்றும் பெறுவது எங்களின் முக்கிய நோக்கம்.
இப்போது, 250 கன்டெய்னர் அளவுக்கு தீப்பெட்டியை ஏற்றுமதி செய்யும் நாங்கள், 600 கன்டெய்னர் அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம்.
தீப்பெட்டியைத் தயாரிப்பதன் வாயிலாக, பற்ற வைப்பதற்கு மட்டும் நாங்கள் பயன்பட்டால் போதாது; ஆக்கத்துக்கும் பயன்பட வேண்டும் என்கிற எங்கள் எண்ணம், எங்களைத் தோட்டக் கலைக்கு இட்டுச்
சென்றது.'டிரெல்லிஸ் பிலிஸ்' என்கிற பிராண்டில் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான மண், உரம் ஆகியவற்றை இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்குத் தருகிறோம்.
கடந்த ஆறு மாதங்களில், 4,000 வாடிக்கையாளர்களுக்கு தந்திருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுக்க 10 லட்சம் வாடிக்கையாளருக்குத் தர வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

