/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தமிழை வளர்ப்போம் தமிழால் வளர்வோம்!
/
தமிழை வளர்ப்போம் தமிழால் வளர்வோம்!
PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும், பாடல்களாக மாற்றி இசை தொகுப்பாக தயாரித்து இருக்கும் லிடியன் நாதஸ்வரம், அவரது சகோதரி அமிர்தவர்ஷினி:
லிடியன்: நாங்கள் இருவருமே ஸ்கூல் போகவில்லை; வீட்டிலிருந்தே தான் படித்தோம். தமிழ் மொழி சார்ந்து ஏதாவது செய்ய ஆசைப்பட்டோம். திருக்குறளை பாடல்களாக மாற்றலாம் என்பது, எங்கள் அப்பாவின் யோசனை.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், திருக்குறளை பாடல்களாக மாற்றும் முயற்சியை அக்கா ஆரம்பித்தார்; 400 குறள்களுக்கு மெட்டு அமைத்திருந்தார்.
காமத்துப்பாலை அணுகும் வயது இல்லை என்பதால், அந்த முயற்சியை கைவிட்டோம். இதற்கிடையில், தமிழில் முனைவர் பட்டம் பெற்ற சக்தி வாசன் என்பவரிடம் திருக்குறளை முழுமையாக கற்றுக் கொண்டோம்.
ஒவ்வொரு குறளுக்கும் உரை வடிவம் இருக்கு. ஆனால், இசையாக மாற்றும்போது எல்லாருக்கும் புரிந்த எளிமையான மொழியில் இருக்கணும்னு நினைத்தோம். அதற்கு ஏற்ற மாதிரியான உரை வடிவத்தை சக்தி வாசன் எழுதிக் கொடுத்தார்.
இந்த இசை தொகுப் பில், 3 வயது குழந்தை துவங்கி, 700க்கும் மேலானோர் பாடியிருக்கின்றனர். மெல்லிசை முதல், ராப் வரை வெவ்வேறு இசை வடிவங்களில், குறள்கள் பாடல்களாக ஒலிக்கின்றன.
சென்னையில் கடந்த மாதம், 133 குறள்கள் கொண்ட இசை தொகுப்பின் முதல் பகுதியை வெளியிட்டோம். இன்னும் ஒன்பது பகுதிகள் இருக்கு.
பள்ளி மாணவர் களுக்கு கல்வி திட்டத்தில் இசையை சேர்த்து, அடுத்தடுத்த தலைமுறை குழந்தைகள் திருக்குறளை பாட வைக்கணும் என்பது தான் எங்கள் நோக்கம். அதை அரசு தரப்பில் செயல்படுத்துவர் என்று நம்புகிறோம்.
அமிர்தவர்ஷினி: லிடியனது, 18வது பிறந்த நாள் அன்று, குறளிசை காவியத்தை மீண்டும் கையில் எடுத்தோம். உலகப் பொதுமறை என்பதால், உலகம் முழுக்க உள்ள பல இசை வடிவங்கள் இருக்கணும் என்ற நோக்கத்துடன், இசை தொகுப்பை வடிவமைத்தோம். எங்களது முயற்சியை அனைவரும் அறியும் வகையில், சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டோம்.
ஒவ்வொரு குறளும் தனித்துவமாக இருக்கணும் என்பதால், வரிசையாக இல்லாமல் வெவ்வேறு அதிகாரங்கள்; வெவ்வேறு குறள் என விருப்பத்துக்கேற்ப குறளை மெட்டமைத்தேன். மெட்டுக்கு ஏற்ற மாதிரி பாடகர்களை தேர்ந்தெடுத்து பதிவு செய்தோம். உச்சரிப்புக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தோம்.
பதிவு முடித்த குறளுக்கு லிடியன் தான் பின்னணி இசை அமைத்துக் கொடுத்தார். வாத்தியங்களை கையாள்வது, ஒலிக் கலவை, தொகுப்பு என, இந்த இசை தொகுப்பில் என் தம்பியின் வேலை மிகவும் பெரிது!
தமிழை வளர்ப்போம், தமிழால் வளர்வோம்!

