/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
சைவ உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளேன்!
/
சைவ உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளேன்!
PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

'டேஸ்ட்டி பரோட்டா கார்னர்' என்ற பெயரில், மும்பையில் பரோட்டா கடை துவங்கி, தினமும் 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்து வரும் சுரேஷ்: என் சொந்த ஊரான நெல்லையில், சிமென்ட் ஏஜன்சி எடுத்து நடத்தினேன்; அதிகளவு கடன் கொடுத்ததில், நஷ்டம் ஏற்பட்டது. அதன்பின் பால் வினியோக உரிமம் எடுத்து நடத்தினேன்; அது நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால், நண்பர்களின் பேச்சை கேட்டு, உணவகம் ஒன்றை நடத்தினேன். ஒரே நேரத்தில் இரண்டு தொழில்களை கவனித்ததால், எதிலும் கவனம் செலுத்த முடியாமல், இரண்டு தொழிலும் தோல்வியில் முடிந்தது.
சொந்த ஊரில் அனைத்தையும் இழந்து, மும்பைக்கு வந்தேன். என்ன தொழில் செய்ய லாம் என்று நினைத்தபோது, பரோட்டா தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில், 30,000 ரூபாய் முதலீட்டில், மாலை நேரத்தில் மட்டும் சாலையோரம் கடை போட்டு, பரோட்டா தயாரித்து விற்பனை செய்தேன்; அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின், தாராவியில், 180 சதுர அடியில் ஒரு கடை கிடைத்தது. 'டேஸ்ட்டி பரோட்டா கார்னர்' என்ற பெயரில் ஆரம்பித்தேன்.
தமிழகத்தின் சில இடங்களில் கொடுப்பது போன்று, பரோட்டாவுக்கு இரண்டு வகையான சால்னாக்களை கொடுக்க ஆரம்பித்தேன்.
அதுவே வியாபாரம் சூடு பிடிக்க காரணமானது. பரோட்டாவுடன் சேர்ந்து பிரியாணியும் தயாரித்தோம். இரண்டுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்றைக்கு நான் எதிர்பார்த்ததை விட, அதிகமான வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரவு நேரங்களில் வாடிக்கையாளர்கள் நிற்பதற்குக்கூட இடமிருக்காது.
இந்த கடைக்கு அருகிலேயே இன்னொரு கடையையும் சேர்த்து வாடகைக்கு எடுத்து, தற்போது விரிவுபடுத்தி இருக்கிறேன்.
எங்கள் கடையில் கொடுக்கப்படும் சால்னா ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அதற்கான மசாலா பொருட்களை நானே முன்னின்று தயாரிப்பேன். எங்கள் கடையின் சால்னா போல் வேறு எங்கும் கிடைக்காது என்று வாடிக்கையாளர்களே கூறுவர்.
மேலும், தயாரிப்பில் தனித்துவம் வேண்டும் என்பதற்காக, அதன் முழுமையான தயாரிப்பு முறையை தொழிலாளர்களுக்குக்கூட கூறியதில்லை.
வழக்கமான நாட்களில் தினமும், 90,000 ரூபாய் வரை வியாபாரம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்றால், 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
சராசரியாக தினமும், 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. விரைவில், புதிதாக சைவ உணவகமும் துவங்க திட்டமிட்டு இருக்கிறேன்.

