PUBLISHED ON : மே 28, 2026 12:00 AM

நரம்பியல் மற்றும் மூளை வளர்ச்சி குறைவால் பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைகளின் இசை திறமையை, 'சமக்ரதா பவுண்டேஷன்' வாயிலாக வெளிச்சத்துக்கு கொண்டு வரும், சென்னையை சேர்ந்த, 54 வயதான வினோத் வேணுகோபால் மற்றும், 47 வயதான ரேஷ்மி:
வினோத் வேணுகோபால்: கட்டுமான துறையில் பொறியியல் படித்துள்ளேன். சில படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறேன்; இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தேன்.
சென்னையில், 2015ல் பெருவெள்ளம் வந்தபோது, பாதிக்கப்பட்ட பலருக்கு உதவி செய்துள்ளேன்; பாதிக்கப்பட்டவர்களில், ரேஷ்மியும் ஒருவர். வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்த அவர்களின் குடும்பத்தை மீட்டு, பத்திரமாக தங்க வைத்தேன்.
அதை தொடர்ந்து நானும், ரேஷ்மியும் நிவாரண பணிகளை செய்து வந்தோம். 'ஆட்டிசம்' எனும் நரம்பியல் மற்றும் மூளை வளர்ச்சி குறைவால் பாதித்த குழந்தைகளை வைத்து, கொரோனா காலத்தில் ஆன்லைனில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினோம்.
ரேஷ்மி: கடந்த 2023ல், ஒரு இசைக்குழுவை ஆரம்பித்தோம். பொதுவாக, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர் என்றால், வாய்ப்பு கொடுப்பதே பெரிய விஷயம்.
என்னதான் திறமையாக பாடினாலும், இந்த குழந்தைகளை பிரபல பாடகர்களுடன் பாட வைக்க மாட்டார்கள். சிறப்பு குழந்தைகளின் திறமைக்கு, பொருளாதார ரீதியான அங்கீகாரமும் கிடைப்பதில்லை.
இதை எல்லாம் மாற்ற நினைத்தோம். எல்லாரும் சமம் என்று உணர்த்தும் விதமாக, 'சமக்ரதா' என்று பெயர் வைத்தோம். இங்கு, சிறப்பு குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி அளித்து தயார்படுத்துகிறோம்.
எங்கள் சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் பாடும் பிள்ளைகளுக்கு, பணம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இசை நிகழ்ச்சி நடத்துவதில் வரும் கூடுதல் நிதியை, சாதாரண குழந்தைகளின் படிப்புக்கும், மற்ற தேவைகளுக்கும் கொடுத்து உதவுகிறோம்.
சிறப்பு குழந்தைகள் பண உதவி பெறும் இடத்தில் மட்டும் இல்லை... கொடுக்கும் இடத்திலும் இருக்கின்றனர் என நிரூபித்து வருகிறோம்.
ஓராண்டுக்கு, 52 இசை நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு வைத்துள்ளோம். அதன் வாயிலாக பிள்ளைகளுக்கும் ஒரு வருமானம் வரும்.
பெற்றோர் காலத்திற்கு பின், அவர்களை யாராவது பார்த்துக்கொள்ளவும் பணம் வேண்டும். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதையும் மனதில் வைத்துதான் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
எங்கள் இருவரால் மட்டுமே எல்லாம் சாத்தியமாகி விடாது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும், இந்த குழந்தைகளை ஏற்றுக்கொள்ளவும், அவர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்கவும் முன்வந்தால், முழுமையான மாற்றம் நிகழும்.
தொடர்புக்கு: 63817 88551
