தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/சொல்கிறார்கள்/ சமத்துவம் வாழ்வியலாக மாறணும்!

 சமத்துவம் வாழ்வியலாக மாறணும்!

 சமத்துவம் வாழ்வியலாக மாறணும்!


PUBLISHED ON : மே 15, 2026 12:57 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 15, 2026 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களின் உரிமைகளுக்காக பாடுபடும், தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்த அஷ்விதா: கடையத்தில் பிறந்து முக்கூடலில் வளர்ந்தேன். பெற்றோர், இன்றுவரை பீடி சுற்றும் தொழிலாளர்கள். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94 சதவீத மதிப்பெண்கள் வாங்கியும், படிப்பை நிறுத்தி விட்டனர்.

'பொம்பள பிள்ளைகள் வீட்டில் இருப்பதே தெரியக்கூடாது' என்று அப்பா கூறுவார். 'சமைக்கவும், பாத்திரம் தேய்க்கவும் கத்துக்கோங்க; இல்லைன்னா நாளைக்கு புகுந்த வீட்டுக்கு போனா என்னை தான் திட்டுவாங்க'ன்னு அம்மா சொல்லுவாங்க. இதனால், பெரிய போராட்டத்திற்கு பின்தான், கல்லுாரியில் சேர அனுமதி கிடைத்தது.

எப்படியாவது, இந்த வறுமை சூழலில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற எண்ணம், அடிமனதில் ஓடியபடியே இருந்தது. அதனால், வங்கி தேர்வு, போஸ்ட் ஆபீஸ் தேர்வு எல்லாம் எழுதினேன்.

'யங் இந்தியா பெல்லோஷிப் புரோகிராம்' என்ற விளம்பரம் பார்த்து விண்ணப்பித்ததில் உதவித்தொகை கிடைக்கவே, உயர் கல்விக்காக, 2012ல் டில்லி சென்றேன்.

ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பெண்கள் என்று சொல்வது மாதிரியான வகுப்புகள் இருக்கும். எனக்கு தமிழை தவிர வேறு மொழிகள் தெரியாது.

ராஜுன்னு ஒரு தமிழர், அங்கு பேராசிரியராக இருந்தார். எனக்குள் இருந்த தயக்கத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உடைத்து, கேள்விகள் கேட்கவும் பேசவும் ஊக்கப்படுத்தியவர் அவர் தான்.

டில்லி பெல்லோஷிப் முடிந்ததும், நான் வளர்ந்த கிராமத்திற்கே சென்று, முதல் தலைமுறை பட்டதாரிகளுடன் வேலை செய்ய நினைத்தேன்.

சுய விழிப்புணர்வு, சுய மேம்பாடு மற்றும் வாய்ப்புகளுக்கான வழித்தடங்களை உரு வாக்குதல் ஆகிய மூன்று விஷயங்களுக் காக, 'போதி ட்ரீ பவுண் டேஷன்' என்ற அமைப்பை ஆரம்பித்தேன்.

தமிழக அரசுடன் இணைந்து, துாய்மை பணியாளர்களின் குடும்பங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் முன்னேற்றத்திற்காக களப்பணிகள் செய்தோம். தமிழகம் முழுக்க ஓராண்டு பயணித்து நிறைய விஷயங்கள் செய்தோம்.

துாத்துக்குடியில் உள்ள பெண் பஞ்., தலைவர்களை சந்தித்தேன். பெயரளவுக்கு தான் பெண்கள் தலைவர்களாக இருந்தனரே தவிர, பின்னால் ஆண்கள் தான் இருந்தனர். அந்த பெண்களுக்கு இருக்கும் சவால்கள் குறித்து பேசினேன்.

அதன்பின், உலக வங்கி மூலம் தமிழக பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றினேன். பொது நிர்வாகத்தில் முதுகலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பெண் உரிமைகளை மனித உரிமைகளாக பார்க்கும் நிலை இங்கு வர வேண்டும். சமத்துவமும், பெண்ணியமும் வெறும் வார்த்தைகளாக நின்று விடாமல், வாழ்வியலாக மாறும்போது தான், அடுத்தடுத்த தலைமுறை பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us