PUBLISHED ON : ஆக 16, 2025 12:00 AM

பெற்றோர், உறவினர்கள் இன்றி ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, படித்து, பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வரும், சேலத்தைச் சேர்ந்த மணிமேகலை:
சிறு வயதில் அம்மா இறந்து விட்டார். விவசாயியான அப்பாவால் என்னை தனியாக வளர்க்க முடியவில்லை. அதனால், 'நேசக்கரங்கள்' என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் என்னை சேர்த்து விட்டார். அப்போது எனக்கு, 6 வயது தான். பள்ளி முதல் கல்லுாரி படிப்பை முடிக்கிற வரை அங்கு தான் வளர்ந்தேன். கொரோனா சமயத்தில், அப்பாவும் இறந்து விட்டார்.
'நம் கஷ்டத்தை விட படிப்பு தான் பெரிது, அதுதான் முக்கியம்' என உணர்ந்து, கடுமையாக படிக்க ஆரம்பித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கினேன்.
தனியார் கல்லுாரி ஒன்றில் பி.காம்., சேர்ந்தேன். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் பிடிப்பு இருக்கும். யாருமே இல்லாத எனக்கு, படிப்பு தான் அந்த பிடிப்பு!
படிப்பில் கவனம் செலுத்தியதோடு, அதை தாண்டியும் கற்றல், போட்டிகளில் ஆர்வமாக பங்கெடுப்பு, நிறைய பயிற்சிக்கு என்னை உட்படுத்தி கொள்வது என, முயற்சி செய்தபடியே இருப்பேன்.
இதனால், நிறைய அனுபவங்களும் கிடைத்தன. அதனால், கல்லுாரி 'கேம்பஸ் இன்டர்வியூ'வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டேன்; சென்னையில், டி.சி.எஸ்., நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
இனி, எவரையும் சார்ந்து இருக்க வேண்டாம் என பெரிய ஆசுவாசம். ஆனால் வேலையிலும், வேலை செய்த இடத்திலும் அடுத்தடுத்து சவால்கள் இருந்தன. அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.
முதல் சம்பளம் வாங்கிய அந்த நாள், 'நீ சந்திப்பது எல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள். ஆனால், இந்த சம்பளம் தான் பெரிது. அதனால், எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்த வேலையில் முன்னேறும் வழியை பார்' என்று, எனக்கு நானே உறுதியாக சொல்லிக் கொண்டேன்.
என்னை வளர்த்து ஆளாக்கிய இல்லத்துக்கு, முதல் மாத சம்பளத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை அனுப்பினேன். வேலை கொடுத்த பொருளாதார பலத்தில் என் தேவைகள், சின்ன சின்ன ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறி வருகிறது.
சுய ஒழுக்கத்துடன், பிடித்ததை செய்வதற்கும், சமூக கட்டமைப்புகளை கண்மூடித்தனமாக நம்பாமல் கேள்விகள் கேட்பதற்கும், என்னை மேம்படுத்தி கொண்டேன்.
இதனால், பதவி உயர்வுகள் தேடி வந்தன. பெங்களூரில் வேறு கம்பெனி மாறினேன். தற்போது எம்.பி.ஏ., படித்து வருகிறேன். வாழ்க்கை போகும் போக்கில் நாமும் போகாமல், அதை நமக்கு பிடித்த மாதிரி மாற்றவும், வாழவும், படிப்பும் - வேலையும் மிக முக்கியம் சகோதரிகளே!