/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியம்!
/
தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியம்!
PUBLISHED ON : ஜன 23, 2026 04:58 AM

'அம்மணி புட் புராடக்ட்ஸ்' என்ற பெயரில், ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்து வரும், 26 வயதான சந்தியா: நான் பிறந்து வளர்ந்தது, திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில். கோவையில் உணவு சேவை மேலாண்மை மற்றும் 'டயட்டீஷியன்' படிப்பு படித்தேன்.
ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற்ற போது, அங்கு வரும் நோயாளிகளிடம் அவர்கள் உணவு முறையை கேட்டு, தெரிந்து கொள்வோம்.
கை நிறைய சம்பாதிப்போர் கூட, ஊட்டச்சத்து உணவுகளை குறைவாக சாப்பிடுவது தெரிந்தது. அவர்களிடம் காரணம் கேட்டபோது, 'கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட நினைத்தாலும், அதை தயாரிக்க நேரம் இல்லை' என்று கூறினர்.
படித்து முடித்ததும், ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களை தயாரித்து, விற்பனை செய்வது என்று, அப்போதே முடிவெடுத்தேன். அந்த நேரத்தில், கொரோனா ஊரடங்கு வந்தது.
அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு, ஆரோக்கியமான உணவு வகைகளை செய்து கொடுத்தேன். சாப்பிட்ட பலரும், நன்றாக இருப்பதுடன், தொடர்ந்து சாப்பிடுவதால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினர்.
கடந்த, 2023ல் ஊட்டச்சத்து உணவு பொருட்களை தயாரித்து, விற்பனையை ஆரம்பித்தேன். நான் படித்த கல்லுாரிக்கு வெளியில் ஒரு மேஜை போட்டு, என் பொருட்களை விற்பனை செய்தேன். முதல், 10 நாட்கள் ஒருவர் கூட வாங்கவில்லை. விசாரித்து செல்வர்; ஆனால், வாங்க மாட்டர்.
அதன்பின் ஒருவர் மட்டும் ஒரு லட்டு வாங்கி சாப்பிட்டார். விலை, 10 ரூபாய் என்று கூறியதும், 'விலையும் குறைவாக இருக்கிறது. ருசியும் நன்றாக இருக்கு' என கூறி, ஐந்து லட்டுகள் வாங்கி சென்றார்.
என் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர் களை போய் சேர வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 2.50 லட்சம் ரூபாய் செலவு செய்து, உணவு விற்கும் வண்டி ஒன்றை தயார் செய்தேன்.
பகலில் உணவு பொருட்கள் தயாரிப்பு வேலைகளை முடித்து விட்டு, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, வண்டியில் எடுத்து சென்று விற்பனை செய்வேன்.
முளை கட்டிய தானிய கஞ்சி மாவு, முளை கட்டிய கறுப்பு உளுத்தங்கஞ்சி மற்றும் ராகி மாவு, கோதுமை மாவு, கறுப்பு உளுந்து லட்டு, பச்சை பயறு லட்டு என, 20 பொருட்கள் தயார் செய்கிறேன்.
சராசரியாக மாதம், 40,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. வரும் வருமானத்தையும் இதில் தான் முதலீடு செய்கிறேன். கணிசமான லாபம் கிடைக்க, இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
இன்னும், 10 ஆண்டுகளில், 'அம்மணி பிராண்ட்' பொருட்கள் பல வீடுகளில் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறேன்.
தொடர்புக்கு
93630 40890

