PUBLISHED ON : மார் 25, 2026 12:00 AM

கடலுார் மாவட்டம், பரதுார் ஊராட்சியில் இயங்கி வரும் அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழுவின் செயலரான, 40 வயதாகும் மேனகா:
நாங்கள் மிதியடி, பாத்திரம் தேய்க்கும் நார் போன்ற பொருட்களை கைகளாலேயே தயாரித்து விற்பனை செய்கிறோம். தயாரிப்புக்கு தேவையான தேங்காய் நார், கயிறு, சாயப்பொடி போன்ற மூலப்பொருட்களை, அரசின் மானிய உதவி மூலம் வாங்கிக் கொள்கிறோம்.
தயாரித்த பொருட்களை சிதம்பரம், கடலுார் போன்ற ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்கிறோம்.
சுய உதவிக்குழு முகாம்கள், மாநாடுகள் போன்ற நிகழ்வுகளிலும், 'அன்னை தெரசா' குழு பெயரில் கடை அமைத்து விற்பனை செய்கிறோம்.
கிடைக்கும் வருமானத்தை, தயார் செய்த பொருட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சமமாக பகிர்ந்து கொள்கிறோம்.
மிதியடி தயாரிப்பதற்கு முதலில் தேங்காய் நாரை கயிறுகளாக தயாரித்துக் கொள்வோம்.
பின், கோணி ஊசி என்ற பெரிய ஊசி மூலம் கைகளால் பின்னி, தேவையான நீளத்தில் மிதியடிகளை உருவாக்குவோம்.
இதேபோல், தேங்காய் நாரை பின்னி, அதை வட்ட வடிவமாக மாற்றி, பாத்திரம் தேய்க்கும் நார் செய்கிறோம்.
'தேங்காய் நாரால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின் கடினமான அமைப்பின் காரணமாக, காலின் அடிப்பகுதியில் உள்ள நரம்புகள் துாண்டப்படும்; இதனால், ரத்த ஓட்டம் சீராகும்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு மிதியடி பின்னினால், 50 ரூபாய் கிடைக்கிறது; இதன் அடிப்படையில் ஒருவருக்கு மாதம், 7,500 ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது.
பகுதி நேர வேலை என்பதாலும், உள்ளூரிலேயே வேலை என்பதாலும், குடும்ப வேலைகளும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறோம்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த குழுவில் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
நான் உட்பட, எங்கள் குழுவில் உள்ள பெண்கள் பலருக்கும், 10 ரூபாய் பால் பாக்கெட் வாங்குவதற்கு கூட யோசிக்கும் நிலை முன்னர் இருந்தது.
இப்போது, அவரவர் செலவுகளை அவரவரே பார்த்துக் கொள்கிறோம்; குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம். இதைத்தான் எங்களுடைய வெற்றியாக பார்க்கிறோம்.
தொடர்புக்கு: 85086 38189
