PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

'சரசுஸ் சமையல்' என்ற, 'யு - டியூப்' சேனல் நடத்தி வரும் கரூரைச் சேர்ந்த, 60 வயதான சரஸ்வதி: எங்கள் கொங்கு மண்டல சமையலை நன்கு செய்வேன். நிறைய சமையல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளேன். ஒருமுறை, கால் வலிக்காக கோவையில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் தங்கியிருந்த போது, அங்குள்ள எல்லாரிடமும் சமையல் குறித்து பேசினேன்.
அவர்கள் அனைவரும், 'இத்தனை ரெசிப்பிகள் சொல்றீங்களே... நீங்களே யு - டியூப் சேனல் ஒன்று ஆரம்பிக்கலாமே'ன்னு சொன்னாங்க. அது சம்பந்தமான வீடியோக்களை போட்டு காட்டியும் உற்சாகப்படுத்தினர்.
அப்போது தான், யு - டியூப்னு ஒன்றையே முதன்முதலாக பார்த்தேன். வீட்டுக்கு வந்ததும், கணவரிடம் இதுகுறித்து சொல்ல, அவர் உற்சாகம் கொடுக்க, அது குறித்து முழுதாக தெரிந்து கொண்டு, 10 ஆண்டுகளுக்கு முன், யு - டியூப் சேனல் ஆரம்பித்தேன்.
ஒரு நாளைக்கு நான்கு ரெசிபி வீடியோக்களை, வீடியோகிராபர் உதவியுடன் எடுத்து வைத்துக் கொள்வேன். வாரத்திற்கு ஒன்று என பதிவிடுவேன். நான்கு ஆண்டுகள் நன்றாக சென்றது; 50,000 பேர் என் வீடியோக்களை பார்வையிட்டனர்.
திடீரென்று ஒருநாள், 8 வயதான என் பெரிய பேத்தி மூளையில் கட்டி வந்து இறந்து விட்டாள். நான் நடைபிணமானேன். நட்பு வட்டாரத்திலும், உறவினர்களும் மீண்டும் யு - டியூபை நடத்தச் சொல்லி நம்பிக்கை கொடுத்தனர். என் இரண்டாவது இன் னிங்சை ஆரம்பித்தேன்.
முதலில் என் வீடியோக்களின் எடிட்டிங் வேலையை, ஒரு கல்லுாரி மாணவி தான் செய்து கொடுத்து வந்தார். அதன்பின் கொரோனா ஊரடங்கு காலத்தில், வீடியோ எடிட்டிங் குறித்து நானே கற்றுக் கொண்டேன்.
வீடியோக்களை பதிவிடுவது, பெயர் வைப்பது என அனைத்தும் நானே செய்ய ஆரம்பித்தேன். இதுவரை, 2,500 வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன். இப்போது, 5 லட்சம் பேர் பார்க்கின்றனர். யு - டியூப் சேனல் வாயிலாக மாதம், 30,000 ரூபாய்க்கு குறையாமல் வருமானம் வருகிறது.
அடுத்து, 'சரசுஸ் புட் புராடக்ட்ஸ்' என்ற பிசினஸ் ஆரம்பித்தேன். என்னிடம், 5 பேர் வேலை பார்க்கின்றனர். சாம்பார் பொடி, இட்லி பொடி, கொள்ளுப்பொடி, பிரியாணி மசாலா, இடியாப்ப மாவு, முருங்கை பொடி என, 30க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறேன்.
மாதம், 200 கிலோ பொடி வகைகள் தயாரிக்கிறேன். இதில் மாதத்திற்கு, 50,000 ரூபாய் வருமானம் வருகிறது. காலத்திற்கேற்ப நம்மை, 'அப்டேட்' செய்து கொண்டால், வெற்றி பெறலாம். வயதெல்லாம் தடையே இல்லை!