/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கட்டை உடைக்கும் தொழிலிலிருந்து அம்மாவை மீட்கணும்!
/
கட்டை உடைக்கும் தொழிலிலிருந்து அம்மாவை மீட்கணும்!
PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

புகைப்பட கலையில் அசத்தும், வடசென்னையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி விக்னேஷ்வரி: நான், 'வியாசைத் தோழர்கள்' நடத்துற டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவு பாடசாலையின் மாணவி. பிரபல போட்டோ கிராபரான பழனிகுமார் அண்ணா எங்க பாடசாலைக்கு வந்து, 'யாருக்கெல்லாம் போட்டோகிராபியில் ஆர்வம் இருக்கு'ன்னு கேட்டபோது முதலில் கை உயர்த்தியது நான் தான்.
ஷட்டர் ஸ்பீடு, ப்ரேம்னு சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து கேமராவைத் தந்துட்டார் அண்ணன். கேமரா கையில் கிடைச்சதும் கண்ணில் படுறதெல்லாம் போட்டோவா தெரிந்தது.
ஒரு நாள் நாங்கள் எடுத்த படங்களை பார்த்த பழனிகுமார் அண்ணா, 'உங்க தெருவிலேயே நிறைய கதைகள் இருக்கு, அதைத் தேடிப்பிடிச்சு எடுங்க'ன்னு சொன்னார்.
யோசித்துப் பார்த்தால், எங்க வீட்டிலேயே ஒரு கதை இருக்கு. 10 வயதில் இருந்து உழைச்சுக்கிட்டே இருக்கும் என் அம்மாவோட கதை.
'அம்மா, உன்னைப் போட்டோ எடுக்கப் போறேன்'னு சொன்னவுடனே, அம்மா முகத்தில் அவ்வளவு வெட்கம். அவங்களுக்கே தெரியாம எடுக்க துவங்கினேன். அம்மா பாதத்தில் இருந்த வெடிப்புகளை எடுத்தேன். அந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அழுகை வரும்.
'வியாசைத் தோழர்கள்' நடத்திய, 'எங்கள் தெருக்கள், எங்கள் கதைகள்' புகைப்பட கண்காட்சியில் நான் காட்சிப்படுத்தியிருந்தது, என் அம்மாவின் வாழ்க்கையை. 10 வயதில் துவங்கி, 33 ஆண்டுகளாக கட்டை உடைக்கும் தொழில் செய்யும் அந்தத் தாயின் முகத்தில் அவ்வளவு ஒளி.
என் அம்மா கோமதி, கட்டை உடைக்கும் தொழில் செய்கிறார். மின்சார பணிகளுக்குப் பயன்படும் பிளாக் கட்டை. தொழில் மொழியில் அதன் பெயர், 'சக்கை' என்பர்.
பெரிய தேக்குக் கட்டைகளை வாங்கி வந்து உளி, கொட்டாப்புளி கொண்டு, சுவரில் அடிக்கும் வகையில் சிறு சிறு கட்டைகளாக வெட்டி எடுக்க வேண்டும்.
அம்மா, 10 வயசிலிருந்து இந்த வேலை செய்றாங்க. அவங்க அம்மாவுக்கும் இதுதான் வேலை. பாட்டியும் அம்மாவும் பட்ட கஷ்டத்தை கேட்டா, 'ஓ'ன்னு அழத் தோணும்.
அம்மா வேலை செய்யும் இடத்துக்கு மேலயே நான் எடுத்த புகைப்படங்களை மாட்டியிருந்தாங்க. கண்காட்சிக்கு வந்தவங்ககிட்ட போட்டோவை காமிச்சு எக்ஸ்பிளைன் பண்ணிட்டு, பக்கத்தில் உட்கார்ந்து கட்டை உடைச்சுக்கிட்டிருந்த அம்மாவையும் காமிச்சேன்.
அப்போது, அம்மா முகத்தை பார்க்கும்போது பெருமையாக இருந்தது. சீக்கிரமே படிச்சு வேலைக்கு சென்று அம்மாவை இந்தத் தொழிலில் இருந்து மீட்கணும்; ஓய்வாக உக்கார வச்சுட்டு குடும்பப் பொறுப்பை ஏத்துக்கணும்.

