PUBLISHED ON : செப் 26, 2026 01:23 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள், சினிமா நடிகர் மற்றும் நடிகையரை, தங்கள் விளம்பரத் துாதர்களாக பயன்படுத்தி, இந்தியா போன்று வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் பெண்களையும், சிறுவர்களையும், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கும் இலக்குடன் செயல்படுகின்றன. அதற்கு துணை போகும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள், நடிகர், நடிகையர் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன். புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு, சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள் முதலீடு செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
சிகரெட் மட்டுமா...? பெண்களும் மது அருந்துவது போன்ற காட்சிகளை வைத்து, மதுபானங்கள் விற்பனையையும் ஊக்குவிக்கிறாங்களே!
பா.ஜ., தமிழக பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'அதிகாரிகள், தங்கள் வேலையை ஒழுங்காக செய்தால், அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை. மக்கள் விரும்பிக் கொடுத்தால் அதை மரியாதையுடன் செய்யலாம். மக்கள் பிரியப்பட்டு லஞ்சம் கொடுப்பதில் தப்பில்லை' என, கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவலிங்கே கவுடா பேசியுள்ளார். அதிகாரிகளுக்கு அரசு சம்பளம் தருகிறது. மக்கள் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? இப்படி லஞ்சத்தை ஊக்குவிக்கும் அமைச்சரை, பதவியிலிருந்து முதல்வர் சிவகுமார் ஏன் நீக்கவில்லை?
'உண்மையைச் சொன்னவருக்கு தண்டனை தரணுமா'ன்னு நினைச்சிருப்பாரோ?
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணைத் தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
அரிசி, பருப்பு விலை எல்லாம் ஆகாயம் நோக்கி... ஆளத் தெரியாத மக்குகளால், மாநிலத்தின் வளர்ச்சி பாதாளம் நோக்கி. 6 கோடி ரூபாய் செலவு செய்து, மேட்டூர்ல ஷூட்டிங் நடத்திய காவிரி தண்ணீர் அடுத்த ஊரு தாண்டுறதுக்குள்ளே ஆவியாகிப் போச்சு. துருப்பிடிச்ச வண்ணத்தில் இந்த துக்ளக் ஆட்சி; சீர்கெட்ட, 'பிளாக் டிக்கெட்' ஆட்சியால், ஊரு கெட்டுப் போச்சு.
தமிழக அரசின் வரி வருவாய் ஏறியிருப்பதும், கடனும், 'கட்டிங்' வசூலும் கம்மியாகி இருப்பதும் உங்க கண்ணுல படலையா கவிஞரே!
மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், இதே போன்ற பாலியல் வழக்கில் இருந்து, தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி தப்பித்துள்ளார். போலீஸ் துறையினருக்கு அழுத்தம் கொடுத்த முன்னாள் ஆளுங்கட்சியினர் யார்? தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதும் வீரமணி தப்பித்துள்ளார்; வீரமணியை தப்பிக்க வைத்தது யார்?
எந்த ஆட்சி நடந்தாலும் போலீஸ் அதிகாரிகள் தயவில்லாம, அவர் தப்பியிருக்க முடியாது என்பது தான் உண்மை!
