PUBLISHED ON : செப் 02, 2026 01:45 AM

சமூக ஆர்வலரும், பிரபல நடிகையுமான ரேவதி பேட்டி:
இந்த நுாற்றாண்டு மகளிருக்கானது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் நல்ல வாழ்க்கை சூழலை உருவாக்க வேண்டும். பெண்கள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். எங்கு செல்ல வேண்டும்; எங்கு செல்லக்கூடாது என அவர்களுக்கு அறிவுரை கூறுவது ஒருபுறம் இருந்தாலும், ஆண் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
வாஸ்தவம் தான்... பெண் குழந்தைகளுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வளர்க்கும் பெற்றோர், அதே கட்டுப்பாட்டில் பாதியைக்கூட ஆண் குழந்தைகளிடம் காட்டுறது இல்லையே!
----
காங்கிரஸ் கட்சி இளைஞர் அமைப்பின் தேசிய தலைவரான, உதய்பானு சிப் பேட்டி:
இளைஞர்களின் குரலை ஒடுக்க, பா.ஜ., அடக்குமுறையை கையாள்கிறது. ஜூலையில் டில்லியில் நடந்த கலவரத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மீது கண்ணீர் புகை, ரப்பர் குண்டு வீச்சு, தடியடி பிரயோகம், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது பற்றி தனக்கு தெரியாது என்கிறார். இந்தியாவில் இது போன்ற பலவீனமான ஒரு உள்துறை அமைச்சர் இருந்ததில்லை.
நீங்க சொல்ற அந்த பலவீனமான அமித் ஷா தான், இன்றைக்கு நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கி, சாதனை படைச்சிருக்கார் தெரியுமா?
------
தி.மு.க.,வைச் சேர்ந்த, பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் மகேஷ் பேட்டி:
தமிழக முதல்வராக விஜய் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அவர் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, பிரதமராகவோ, அமெரிக்க ஜனாதிபதியாகவோ ஆகும் கனவை பற்றி பேசட்டும். முதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இலவச பஸ் பயணம், இலவச காஸ் சிலிண்டர் ஆகிய திட்டங்களில் தெளிவு இல்லாமல் உள்ளது.
விஜய் கொடுத்த வாக்குறுதிகளில், பாதியையாவது நிறைவேற்றிட்டு இருக்கார்... ஆனா, 2021 சட்டசபை தேர்தலில், நீங்க தந்த வாக்குறுதிகள் பலவற்றை காத்துல பறக்க விட்டுட்டு, வீட்டுக்கே போயிட்டீங்களே!
----
பா.ஜ., தமிழக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் பேட்டி:
தமிழகத்தில், மத்திய அரசோடு இணக்கமாக இல்லாத தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. சமீபத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, 'மத்திய அரசுடன் இணக்கமாக இருப்போம்' என ஆரம்பத்தில் கூறியது. ஆனால், அக்கட்சி அமைச்சர்களின் செயல்பாடுகளால், ஐந்தாண்டுகள் ஆட்சியில் நீடிப்பது கடினம் என்றே தோன்றுகிறது.
'மத்திய பா.ஜ., அரசுக்கு இணக்கமாக நடந்துக்கலை என்றால், இந்த ஆட்சியை அஞ்சு வருஷம் நடத்த விட மாட்டோம்'னு நாசுக்கா மிரட்டுறீங்களோ?
