PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

சிவகங்கை, காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: எல்லாரது ஆட்சியிலும், 'லாக்கப்' மரணங்கள் நிகழ்ந்துள்ளன. லாக்கப் மரணங்களில் அரசை குறை சொல்ல முடியாது. காவல் துறையினரின் கலாசாரத்தில் மாற்றம் வேண்டும். காவல் துறையினர் இன்னும் காலனிய மனநிலையில் இருக்கின்றனர். இந்த போலீஸ் துறை, பிரிட்டிஷ் ஆட்சியில் மக்களை அடிமையாக்க அமைக்கப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாட்டுக்கு விடுதலை வாங்கி தந்த உங்க கட்சியால, போலீசாரின் மனநிலையை மாத்த முடியலையா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி: த.வெ.க., கூட்டணியில் பா.ம.க., இணைந்தால் என்ன செய்வீர்கள் என்ற யூகமான கேள்விகளுக்கு, நானும் யூகமாக பதிலளிக்க முடியாது. ஜாதிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்பதே வி.சி.க.,வின் நிலைப்பாடு. தேர்தலுக்கு முந்தைய எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். த.வெ.க., உடனான எங்களின் உறவு நெருக்கமாக உள்ளது.
'ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது'ன்னு சொல்றாரே... சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் இவர் வாங்கிய எட்டு இடங்களில், ஆறு இடங்களை தனி தொகுதிகளா வாங்கியது ஏன்?
காங்., தமிழக தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை: கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, ராமர் கோவில் உண்டியல் திருட்டை இப்போது பா.ஜ.,வினர் ஒப்புக் கொள்கின்றனர். பக்தர்களின் நம்பிக்கையையும், பணத்தையும் சுரண்டிய பாசிச பா.ஜ.,வின் முகமூடி கிழிந்து விட்டது. கடவுள் பெயரால் கல்லா கட்டிய உங்களின் ஊழல் நாடகத்திற்கு, வரும், 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மக்கள் சம்மட்டி அடி கொடுப்பர்.
இப்படி சொல்லி சொல்லியே மூணு லோக்சபா தேர்தல்கள் நடந்தும், காங்., ஆட்சிக்கு வந்த பாடில்லை... 2029ம் ஆண்டிலாவது இவரது கனவு நனவாகுமான்னு பார்ப்போம்!
முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி செயலருமான அன்னியூர் சிவா அறிக்கை: பா.ம.க., தலைவர் அன்புமணி, '1987ல் வன்னியர் இடஒதுக்கீடுக்காக நடந்த போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்க வேண்டும்' என்கிறார். வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஸ்டாலின் ஆட்சியில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், 6 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மணி மண்டபத் திற்கு அன்புமணி முதலில் வந்து, மாலை அணிவித்து மரியாதை செய்யட்டும். பின், அரசு வேலை பெற்று தரலாம்.
உங்க ஆட்சியில் கட்டியது என்பதால், அதற்கு மரியாதை செலுத்த அன்புமணி தயங்குறாரோ?
