PUBLISHED ON : ஏப் 14, 2026 01:49 AM

அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளரான, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் பேச்சு:
அவிநாசியை, தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அன்னுார்
மற்றும் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும்.
அன்னுார் வட்டார விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை மேட்டுப்பாளையம், கோவை
மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் அவலத்தை போக்க, அன்னுாரில்
உழவர் சந்தை அமைக்கப்படும். அவிநாசியில் இவர் ஜெயித்தால், மத்திய அமைச்சர்
பதவியை ராஜினாமா பண்ண வேண்டியிருக்குமே... அதுக்கு தயாராக இருக்காரா?
த.மா.கா., தலைவர் வாசன் பேச்சு: கொலை, கொள்ளை, போதை பொருள் புழக்கம், பாலியல் தொந்தரவுகளை தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. மத்திய அரசை தி.மு.க., எதிர்க்கட்சி அரசாக பார்க்காமல், எதிரி கட்சி அரசாக பார்ப்பதால் தான் தமிழகம் வளர முடியவில்லை. ஆன்மிக ஈடுபாடு இல்லாமல், கோவிலுக்கு போகாதவர்களுக்கும், நெற்றியில் பொட்டு வைப்பதே தவறு என கருதுபவர்களுக்கும், மக்கள் ஓட்டு போடக்கூடாது. மாறாக, அனைத்து மதமும் சமம் என கருதுபவர்களுக்கு ஓட்டு அளித்து, வெற்றி பெற செய்ய வேண்டும்.
'தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போடாதீங்க'ன்னு சொல்றதை விட்டுட்டு, ஏன் இப்படி சுத்தி வளைக்கிறாரு?
தமிழக மகளிர் காங்., தலைவர் பதவி மற்றும் கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள ஹசீனா சையது பேட்டி: பெண்களை மதிக்காத கட்சியாகவும், பெண்கள் மீது கொஞ்சம் கூட கரிசனம் இல்லாத கட்சியாகவும் காங்கிரஸ் மாறி விட்டது. அதனால், அந்த கட்சியை நான் துாக்கி எறிந்து, வெளியே வந்து விட்டேன். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நான் ராஜினாமா செய்த பின், என்னை நீக்கியதாக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அறிவித்திருப்பது, பைத்தியக்காரத்தனமாக உள்ளது.
தேர்தலில், 'சீட்' கிடைக்காத கோபத்தில் கட்சியில் இருந்து வெளியேறிட்டு, ஏதோ கொள்கைக்காக வெளியேறியது மாதிரி சமாளிக்கிறாங்களே! தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேச்சு: நம் நாட்டில், 1977க்கு பின், ஒரு கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்துள்ளது என்றால், அது அ.தி.மு.க., தான். கோவை, அ.தி.மு.க.,வின் கோட்டை. இந்த மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ., - அ.தி.மு.க., ஆகிய இரண்டுமே, எளிமையான கட்சிகள். சாமானிய மனிதர்களும் தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்பதே, தே.ஜ., கூட்டணியின் அடிப்படை தத்துவம்.
வாஸ்தவம் தான்... பிரதமர் மோடியும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுமே இதற்கு சரியான உதாரணங்கள்!

