PUBLISHED ON : நவ 04, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க., அரசில்,
பணி நியமனங்களுக்கு, 800 கோடி ரூபாய் அளவிற்கு இமாலய ஊழல் நடந்துள்ளது.
செந்தில் பாலாஜி போல் பலர், ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ளனர். பணம்
கொடுத்தால்தான் அரசு பணி என்ற நிலை இருப்பது, இளைஞர்களின் எதிர்காலத்தை
கேள்விக்குறியாக்கி உள்ளது. 'உள்நோக்கத்துடன் புகார்' என, அமைச்சர் நேரு
கூறுவதால், சி.பி.ஐ., விசாரிக்க அனுமதிக்க வேண்டும். சி.பி.ஐ.,
விசாரித்தால், நேரு துறையின் வண்டவாளங்கள் எல்லாம் தண்டவாளத்துல ஏறிடுமே...
அதனால, அதுக்கு கண்டிப்பா அனுமதிக்கவே மாட்டாங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: டெல்டா மாவட்டங்களில், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து வீணாகி போனதை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு, அம்பலப்படுத்தினார். அதன்பின், 'ஒரு நெல்மணி கூட வீணாகாமல், கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியது, குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டிய கதையாக இருக்கிறது.
'கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்'னு கூட இதை சொல்லலாமே!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தனியார் பள்ளிகளுக்கு இணையாக, 'மாதிரி' பள்ளிகளை உருவாக்கி, அந்த பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தையும், மதிப்பெண்ணையும் தமிழக அரசு உயர்த்தியது வரவேற்கக்கூடியது. தற்போது, ஒன்றியத்திற்கு ஒன்று, இரண்டு மாதிரி பள்ளிகள் தான் உள்ளன. அனைத்து அரசு பள்ளிகளும், அதே கட்டமைப்புகளுடனும், கல்வி தரத்துடனும், போதிய ஆசிரியர்களுடனும் செயல்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் வரும்.
தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் வந்துடக் கூடாதுன்னு தானே, ஒன்றியத்துக்கு ஒன்றிரண்டு பள்ளிகளை மட்டும் மாதிரி பள்ளிகளா மாத்துறாங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு: இன்றைய தினம், தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. அ.தி.மு.க., தொண்டர்களுக்குள் இருக்கும் நெருப்பை துாண்டி விட்டால் தான், கட்சி மீது பற்றுடன் இருப்பர். விசுவாசமாக பணியாற்றுங்கள். தற்போது, நம் பக்கத்தில் உள்ள வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றும் சக்தி தொண்டர்களிடம் தான் உள்ளது. 2026ல் அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்.
'தொண்டர்களுக்குள் இருக்கும் நெருப்பை துாண்டி விடுறேன்'னு சொல்லி, வன்முறையை துாண்டிய வழக்குல சிக்கிடாதீங்க!

