PUBLISHED ON : செப் 04, 2025 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: கோவில்
நிதியில், பள்ளி, கல்லுாரிகள் நடத்தப் படுவது தொடர்பான தீர்ப்பு குறித்த
கேள்விக்கு, 'நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் அறப்பணிக ளுக்கு மேலும்
உறுதுணையாக இருக்கும்' என, அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதேபோல்,
'கோவில் நிதியில், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவது
சட்டவிரோதம்' என, நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கும் சேகர்பாபு கருத்து
சொல்வாரா? குதிரை, கொள்ளு என்றால் வாய் திறக்கும்; கடிவாளம் என்றால் வாய்
மூடிக் கொள்ளும். நீதிமன்ற தீர்ப்பு விஷயத்தில், அமைச்சர் சேகர்பாபுவின்
நிலையும் இதுதான். சாதகமான தீர்ப்பு வந்தால், துள்ளி குதிப்பதும், பாதகமான
தீர்ப்பு வந்தால், பம்மி பதுங்குவதும் தி.மு.க., வினருக்கு புதுசா என்ன?
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலர் வி.எஸ்.வினோஜ் பேச்சு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்து ஏராளமான நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்க செய்தவர் பழனிசாமி. அவரது ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போது தான் இன்னும் ஏராளமான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும். வேலை வாய்ப்பும் பெருகும். இளைஞர் அணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, ஆதரவு திரட்ட வேண்டும்.
பழனிசாமியின் சாதனைகள் மட்டுமே ஆட்சியை கையில் துாக்கி தந்துடாது... பலமான கூட்டணியும் அவசியம்!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: அனிதாவின் மரணத்தை அரசியல் மூலதனமாக்கி, 'ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில், 'நீட்' தேர்வை ஒழிப்போம்' என்று வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், இன்று வரை நீட் தேர்வை ஒழிக்காமல், குறைந்த பட்சம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கூட பெறாமல், மாணவர் சமுதாயத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். தி.மு.க., செய்த துரோகத் தால், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட, 50 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இவர், ஏற்கனவே தே.ஜ., கூட்டணியில் இருந்தாரே... அப்ப மத்திய அரசிடம் பேசி, 'நீட்' தேர்வுக்கு விலக்கு வாங்கி தந்திருக்கலாமே!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: பீஹாரில் வரைவு வாக்காளர் பட்டியலில், பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. இதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மேற்கொண்டுள்ள பயணம், தேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணையம் முழுமையாக, பா.ஜ., கட்டுப்பாட்டில் உள்ளது.
தேர்தல் ஆணையம் பா.ஜ., கட்டுப்பாட்டில் இருந்தால், சில மாநில சட்டசபை தேர்தல்களில் காங்., எப்படி ஜெயித்தது?