PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேச்சு:
மாணவர்களாகிய நீங்கள் படிக்கும் போது, ஆசிரியர்கள் தான் உங்களுக்கு, 'ரோல்
மாடலாக' இருப்பர். ஆனால், இன்றைக்கு இளைஞர்களாக இருக்கும் உங்களது
வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்றால், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை
நீங்கள், ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், உழைத்தால் ஒரு
மாநிலத்திற்கு முதல்வராகலாம் என்ற வரலாற்றை பழனிசாமி உருவாக்கியுள்ளார்.
கிளை செயலரா துவங்கி, முதல்வரானது பழனிசாமியின் பெரிய சாதனை தான்... ஆனா
இவங்களின், எதிர் முகாமான, தி.மு.க.,வுல, உதயநிதி, இன்பநிதின்னு அடுத்த, 25
வருஷத்துக்கு முதல்வர் வேட்பாளர்களை முன்பதிவு பண்ணி வச்சிருக்காங்களே!
தமிழக, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: இயற்கையில் நோயை சரி செய்யும் பண்புகள் இருந்தால், அதை விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து பயன்படுத்துவதில் தவறில்லை என நான் சொன்னதை, ஏதோ நேராக, கோமியத்தை குடிக்கச் சொன்னதை போல சில அறிவிலிகள் பேசுகின்றனர். நான் ஒன்று சொன்னால், அது நாட்டை பெருமைப்படுத்துவதாக இருக்கும் அல்லது நாட்டு மக்களுக்கு பலன் தருவதாக இருக்கும். அதில், ஆழமான கருத்து இருக்குமே தவிர அழுக்கான மனம் இருக்காது.
கவர்னராக இருந்திருந்தால் அரசியல் பேசாம, எதிர்க்கட்சிகளிடம் இருந்து தப்பிச்சிருக்கலாம்... அவசரப்பட்டு, அந்த பதவியையும் ராஜினாமா பண்ணிட்டாங்களே!
திருச்சி, ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ பேட்டி: தி.மு.க.,வை பொறுத்தவரை, தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்வரும், துறை சார்ந்த அமைச்சர்களும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம்.
'பல வாக்குறுதிகள் நிறைவேற்றப் படலை'ன்னு, தி.மு.க.,வுக்கு எதிரா வாழைப் பழத்தில் ஊசியை ஏத்துறாரே!
தமிழக, காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: த.வெ.க., தலைவர் விஜய் மாநாட்டில் கூட்டம் கூடியதால் மட்டும் அவர் வெற்றி பெறுவார் என்று அர்த்தம் அல்ல. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடியவர்கள். விஜய் எந்த கட்சியை குற்றஞ்சாட்டு கிறாரோ, அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள், அவருக்கு பதிலடி கொடுப்பர்.
'முதல்வரை, 'அங்கிள்'னு விஜய் கூப்பிட்டது தப்பு'ன்னு சொல்லாம, அடக்கி வாசிக் கிறாரே... 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியை, தி.மு.க., தனக்கு தராத கோபம் இன்னும் அவருக்கு தீரலையோ?