PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேட்டி: சீமான் தமிழகத்தில்
இளைஞர்கள் வாயிலாக மாற்றத்தை விரும்புகிறார். நான் அரசியல்வாதி இல்லை. ஒரு
தமிழனாக அவரை ஆதரிக்கிறேன். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போன்று
சீமானுக்கு எந்த சின்னம் கொடுத்தாலும் அவர் வெற்றி பெறுவார். சீமானுக்கு
ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன்.
என்ன இப்படி சொல்லிட்டார்... இவர்
மட்டும் பிரசாரம் செஞ்சா சீமான் 40க்கு 40ல் வெற்றி பெற்று பிரதமரை
தேர்ந்தெடுக்கும் சக்தியாக அல்லவா மாறிடுவார்!
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக் குப்பம் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர் உமாமகேஸ்வரி, பள்ளி கல்வித்துறை குறைகள், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்து முகநுால் பக்கத்தில் வெளியிட்டார். அவரது கருத்து, தி.மு.க., அரசுக்கு எதிராக இருந்ததால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயல்.
'ஜால்ரா' அடிக்கிறவங்களுக்கு, 'டபுள் புரமோஷன்' கொடுக்கிறதும், எதிர்த்து நிக்கிறவங்களுக்கு சஸ்பென்ஷன் கொடுக்கிறதும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் எப்பவும் சகஜம் தானே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 18 மீனவர்கள் விடுதலையாகி சென்னை வந்த அடுத்த நாளே, 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தியாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் இலங்கை பெற்றுக் கொள்கிறது. ஆனாலும், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுகிறது.
மீனவர்களை அடிக்கடி கைது செய்வதும், பின் மத்திய அரசு சொன்னதும் விடுதலை செய்வதுமாக, இலங்கை தன் இருப்பை காட்டிக் கொள்கிறதோ என்று தான் நினைக்க தோன்றுகிறது!
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச் செயலர் கதிரவன் பேட்டி: அ.தி.மு.க., கூட்டணியில் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டுள்ளோம். உசிலம்பட்டியில் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேனி ஒதுக்கப்பட்டால் நான் போட்டியிடுவேன். பார்வர்டு பிளாக் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளது. எங்கள் செயல்பாடு பா.ஜ.,விற்கு எதிரானது. எனவே தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
இதென்ன கூத்து... தேசிய அளவில் 'இண்டியா' கூட்டணியில் இருந்தா, தமிழகத்தில் அந்த கூட்டணிக்கு தலைமையான தி.மு.க.,விற்கு தானே இவர் ஆதரவளிக்கணும்!

