PUBLISHED ON : நவ 05, 2026 12:00 AM

காங்கிரஸ் தமிழக பொதுச்செயலர் எஸ்.எஸ்.காமராஜ் பேச்சு: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள், ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மக்களின் ஓட்டுரிமையை பாதுகாக்கும் இந்த ஜனநாயக போராட்டம் வெற்றி என்பதற்கு, அங்கு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக எழும்பிய கோஷமும், ஆர்ப்பரிப்புமே சாட்சி.
கரப்பான் பூச்சி கட்சி துவங்கிய போராட்டத்தை, வழிப்பறி செய்து தட்டி பறிச்சிட்டு, பெருமை வேற பேசுறீங்களா?
அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், நடிகருமான ராமராஜன் அறிக்கை: என் படங்கள் எல்லாம், இளையராஜா இசையமைத்த பாடல்களுக்காகவே ஓடின. சின்ன பட்ஜெட்டில் எடுத்த படங்கள் அனைத்தும் வெள்ளி விழா கண்டன. தற்போது எனது, கடவுள் தந்த பரிசு படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களை, ‘கம்போஸ்’ செய்தும், அடுத்த சில நாட்களிலேயே பின்னணி இசையையும் முடித்து தந்திருக்கும் என் அண்ணன் இசைக் கடவுளுக்கு என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி.
ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிற தமிழ் திரையுலகில், ‘இளையராஜா இசையால் என் படங்கள் ஓடின’ என நன்றி மறக்காத உங்களை பாராட்டலாம்!
பா.ஜ., தமிழக செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை: ‘தமிழகத்துக்கு என தனி கொடியை உருவாக்க வேண்டும்’ என, த.வெ.க.,வைச் சேர்ந்த பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். எங்கள் மொழி, உங்கள் கொடிக்காக காத்திருக்கவில்லை. இந்திய மூவர்ண கொடியின் கீழ், எங்கள் தமிழ் அடையாளம் ஒருபோதும் சுருங்கி விடாது. இத்தகைய கருத்துக்கள் பிரிவினைவாத மனப்பான்மையை வளர்க்கும் அபாயத்தை கொண்டு உள்ளன.
வாஸ்தவம் தான்... எல்லா மாநிலங்களும் தங்களுக்கென தனி கொடின்னு இறங்கிட்டா, இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகிடாதா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலின் போது, தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுகள் போட்டனர். கள்ள ஓட்டு போட்டவர்களை, என் தலைமையிலான அ.தி.மு.க.,வினர் பிடித்து கொடுத்தோம். ஆனால், என்னை போலீசார் கைது செய்து, 21 நாட்கள் சிறையில் அடைத்தனர். அங்கு எனக்கு தரம் கெட்ட உணவை வழங்கினர். ஆனால், ஊழல் வழக்கில் கைதான தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு, வீட்டிலிருந்தே உணவு. இது எப்படி இருக்கு? வாழ்க ஜனநாயகம்.
- தி.மு.க.,வினரிடம், ‘நாங்க அடிக்கிற மாதிரி அடிக்கிறோம்... நீங்க வலிக்கிற மாதிரி நடியுங்க’ன்னு த.வெ.க., தரப்பு, ‘டீலிங்’ போட்டிருக்குமோன்னு சந்தேகப்படுறீங்களா?
