PUBLISHED ON : நவ 24, 2024 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
தன், 16 வயதில்,
பள்ளிப் படிப்பை கைவிட்ட கவுதம் அதானி இன்றைக்கு, இந்தியாவின் இரண்டாவது
பெரிய பணக்காரர் என்ற தகுதியை பிரதமர் மோடியின் ஆதரவால் அடைந்திருக்கிறார்.
உலக கோடீஸ்வரர்கள் வரிசையில், 609வது இடத்தில் இருந்த அதானி, 2023ல் 13வது
இடத்திற்கு உயர்ந்திருக்கிறார்.
படிப்புக்கும், உழைப்புக்கும்
சம்பந்தமில்லையே... 6ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த காமராஜர்,
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக உயர்ந்ததை மறந்துட்டீங்களா?
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், புத்தகம் கட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டது. நடப்பாண்டு முதல் அதை நிறுத்தம் செய்து, செப்., 20ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அந்த அரசாணையை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி தொடரும்.
நல்ல விஷயம்... அவங்க வாழ்வில் ஒளியேற்றியிருக்கீங்க என்றுதான் சொல்லணும்!
சென்னை மாநகராட்சி கவுன்சிலரும், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவருமான சிவராஜசேகரன் பேச்சு: 'அதானியை கைது செய்ய வேண்டும்' என, நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. தேசிய அளவில் இல்லாமல், உலக அளவில் அதானிக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதானி விவகாரத்தை திசை திருப்பவே, 'பார்லிமென்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்திருக்கிறதோ என்ற சந்தேகம், 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்களுக்கு உருவாகிஉள்ளது.
எது எப்படியோ... பார்லிமென்டை முடக்க, காங்., கட்சிக்கு ஒரு சாக்கு கிடைச்சுடுச்சு!
பா.ம.க.,வின் ஆதரவு அமைப்பான, வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி பேச்சு: சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த துணை முதல்வர், 'அடுத்தும் எங்க ஆட்சிதான்' என, ஆட்டம் போடுகிறார். இதுக்கு போட்டியாக அடுத்து ஒரு சினிமா நடிகர் வந்துள்ளார். அவர் ஒரு கூட்டம் போட்டு, '2026-ல் என் ஆட்சி' என்கிறார். அடுத்த தேர்தலில், ஸ்டாலின் வெற்றி பெற மாட்டார்.
உதயநிதிக்கும், விஜய்க்கும் நடக்கிற போட்டியில, இவங்க கட்சி காணாம போயிடக் கூடாது!

