PUBLISHED ON : நவ 23, 2024 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தஞ்சாவூரில் ஆசிரியை வெட்டிக் கொலை செய்யப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. 'தனிப்பட்ட பிரச்னையால் நடந்த சம்பவம்'என அரசு நழுவாமல், குற்றவாளிக்கு விரைவில் கடும் தண்டனை கிடைக்க வழிசெய்ய வேண்டும். காலதாமதம் செய்து, குற்றவாளியை தப்பிக்க வைத்து விடாதீர்கள்.
குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனை, அடுத்து யாரையும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட அஞ்சும் வகையில் இருக்கணும்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: கடும் காற்று மாசு காரணமாக, 'இனியும் நாட்டின்தலைநகராக, டில்லி நீடிக்க வேண்டுமா' என, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் கேட்டுள்ளார். டில்லி அருகில் உள்ள மாநிலங்களில், பயிர்க் கழிவுகளை எரிப்பதைக் கட்டுப்படுத்த, பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வேளாண் திருத்த சட்டத்தில், பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. அப்போது விவசாயிகளை துாண்டிவிட்டு, அந்த சட்டத்தை எதிர்த்து, பிரச்னைகளை உருவாக்கி, டில்லியில் காற்று மாசு குறைவதை தடுத்து, அரசியல் குளிர் காய்ந்த காங்கிரஸ் கட்சி, இனியும் இந்த நாட்டில் இருக்க வேண்டுமா?
வேளாண் திருத்த சட்டங்களைநிறைவேற்றி இருந்தால் மட்டும், காற்று மாசு குறைஞ்சிருக்குமா என்ன...? மொட்டை தலைக்கும்,முழங்காலுக்கும் முடிச்சு போடுறாரே!
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி: குழந்தைகள், பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரானபிரசார இயக்கத்தை, நாடு முழுதும், கட்சி முன்னெடுத்து வருகிறது. சென்னையில், 'பாலின சமத்துவ நடை' நிகழ்வுக்கான அனுமதியை காவல் துறை மறுத்து விட்டது.ஒதுக்கிக் கொடுத்த இடத்தில்உறுதிமொழி ஏற்பு மட்டும்நடத்தப்பட்டது. இந்தநிகழ்வுக்காக, கட்சியின் மூத்த தலைவர் சவுந்திரராஜன் மற்றும் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அராஜகமான நடவடிக்கை.
வழக்கு மட்டும்தான் போடுவாங்க... மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டாங்க!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேச்சு: வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாழ்வா, சாவா என்ற நிலையே கிடையாது. கண்டிப்பாக அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். தி.மு.க., இரண்டாவது முறையாக, ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. மீண்டும் தி.மு.க.,விற்கு வனவாசம்தான்.
தி.மு.க.,வை வனவாசம் அனுப்பும் அளவுக்கு, பலமான கூட்டணி அமைத்தால்தான் இவர் சொல்றது நடக்கும்!

