PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

விருதுநகர் தொகுதி காங்., - எம்.பி., மாணிக்கம்தாகூர் பேட்டி: தமிழகத்தை
பொறுத்தவரை கேரளா போன்று அடுத்த கட்டத்திற்கு, கூட்டணி ஆட்சிக்கு நகர
வேண்டிய காலம் வந்து விட்டதோ என்ற நிலை உருவாகி இருக்கிறது.
அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு என்ற நிலை வருவதற்கான காலம்
வந்துவிட்டது போன்று தெரிகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
நேரடியா ஆட்சியில் பங்கு கேட்க தைரியம் இல்லாதகாங்கிரசார், திருமாவளவனுக்கு பின்பாட்டு பாட முடிவு பண்ணிட்டாங்களோ?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்க தலைவர் லியாகத் அலிகான்அறிக்கை: 'பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழக அரசுக்கான, 573 கோடி ரூபாயை விடுவிப்பேன்' என, மத்திய அரசு மிரட்டுவது தி.மு.க.,வைஅல்ல; தமிழக மக்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சி. அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
அதையெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க... மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே மத்திய அரசு இதற்கு பணியும்!
முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருப்பதை பார்க்கும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம், அரசுக்கு துளியும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. தி.மு.க.,வை நம்பி ஓட்டளிப்பது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டனர்.
உட்கட்சி பூசலில் தவிக்கும்அ.தி.மு.க.,வை நம்புவதற்கு,அந்த மண் குதிரையே பரவாயில்லைன்னு நினைச்சிடுவாங்களே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கூறியதை நீக்க அரசியல் முதலாளிகள் உத்தரவிட்டதால், அடங்க மறு, அத்து மீறு என, சாதாரண மக்களை துாண்டிவிட்டு, அரசியல் குளிர் காய்பவர்கள், அத்து மீற முடியாமல், அடங்கி போய் அடிபணிந்து நீக்கிவிட்டு, அட்மினை கை காட்டுவது அடிமைத்தனம் மட்டுமல்ல; சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்.
இப்படி எல்லாம் கொம்பு சீவி விட்டால், திருமாவளவன்புதுசா எதுவும் வீடியோபோடுவார்னு எதிர்பார்க்குறாரா?

