PUBLISHED ON : ஏப் 20, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஏழைகள்,
நடுத்தர மக்கள், பெரு நிறுவனங்கள், மாணவர்கள், பெண்கள், முதியோர்,
விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் என, அனைத்து மக்களுக்கும், துறை
சார்ந்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டதோடு, வளர்ச்சி அடைந்த இந்தியா
என்ற இலக்கை நோக்கி, தன் மூன்றாவது தொடர் வெற்றியை நோக்கி மோடியின் பா.ஜ.,
நடை போடுகிறது.
அதெல்லாம் சரி... மோடியின் மூன்றாவது தொடர் வெற்றியில், தமிழக பா.ஜ.,வின் பங்கு இந்த முறையாவது இருக்குமா?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு 2024 - 25ம் கல்வியாண்டில், இத்திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. ஒரு பக்கம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்கும் நிலையில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தேசிய கல்வி கொள்கை முற்றிலும் அகற்றப்படும்' என சொல்லப்பட்டுள்ள நிலைப்பாடு, கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல், தி.மு.க.,விற்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
நேரத்துக்கு ஏற்ப முடிவை மாற்றிக் கொள்ளும் வழக்கம், திராவிட கட்சிகளுக்கு எப்பவும் கை வந்த கலையாச்சே!
தமிழக அரசின் பாடநுால் கழகத்தின் முன்னாள் தலைவர் கா.லியாகத் அலிகான் அறிக்கை: 'லோக்சபா தேர்தலில் காங்., தேர்தல் அறிக்கை ஹீரோ' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவரது கூற்று நுாற்றுக்கு நுாறு உண்மை என, தேர்தல் முடிவு வெளிப்படுத்த உள்ளது.
ஒட்டுமொத்த கருத்துக் கணிப்பும் பா.ஜ.,வுக்கு சாதகமாகத் தானே இருக்கு... இவர் எதை வச்சு மதிப்பெண் போடுறாருன்னு தெரியலையே?
தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: குஜராத் உள்துறை அமைச்சர் ஹார்ஸ் சங்வி தொகுதியில் மட்டும் மூன்று போதை மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தாலே, நாடு முழுதும் பரவுவதை தடுத்து விடலாம்.
இவங்க, 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டியது தானே... ஆனா, அதுக்கு வாய்ப்பிருக்குமா?

