PUBLISHED ON : மார் 23, 2024 12:00 AM

தி.மு.க., துணை பொது செயலர் கனிமொழி பேச்சு: மகளிருக்கு
புதுமைப்பெண் திட்டத்தின் வழியாக, உயர்கல்வி படிக்க கூடிய பெண்களுக்கு நம்
வீட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை
முதல்வர் ஸ்டாலின் நமக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி
தமிழகத்திற்கு வாரத்திற்கு மூன்று நாள் வந்து தங்குகிறார்.
பார்லிமென்டிற்கு செல்வதில்லை. ஏனென்றால் தேர்தல் ஜுரம் அவருக்கு வந்து
விட்டது.
பிரதமருக்கு தேர்தல் ஜுரம் வந்துட்டதா சொல்றாங்களே...
இவங்களுக்கு தேர்தல் பயம் இல்லை என்றால், 'காஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு
தருவோம்'னு ஏன் அறிவிக்கணும்?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமி மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், அவரிடம் ஒரு மிகப்பெரிய நல்ல குணம் உண்டு. அது தன்னை நம்பி இருப்பவர்களை காப்பாற்றுவது. இது சத்தியமான உண்மை. நீங்க நம்பலைன்னா அவரது வேட்பாளர் பட்டியலை பாருங்க. அதுல அவரோட ஆளு ஒருத்தர் இருக்காரா பாருங்க.
அப்படி என்றால், அந்த பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி காண வருவோருக்கு, தேர்தல் நேரத்தில் எதற்கு இலவச பஸ் வசதி செய்ய வேண்டும். இது தேர்தல் விதிமீறல் இல்லையா. கிரிக்கெட் ரசிகர்களை திருப்திபடுத்த, மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்படுவது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
கடந்த முறை ஐ.பி.எல்., போட்டிகள் நடந்தப்ப தரப்படாத இலவச பஸ் பயணத்தை, இப்ப மட்டும் தர்றாங்க என்றால், கண்டிப்பா இது தேர்தல் விதிமீறல்தானே!
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'மாநில சுயாட்சி சார்ந்து, அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம்' என, தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏன் நீட்டி முழக்குகிறீர்கள். தனி நாடு என்று சொல்லித்தான் பாருங்களேன். அடுத்த நிமிஷம் இருக்க வேண்டிய இடத்தில், வைக்க வேண்டிய விதத்தில்வைக்கப்படுவீர்கள். அந்த தைரியம் உள்ளதா?
இவர் ஏன் இவ்வளவு, 'டென்ஷன்' ஆகுறாரு... அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய இடத்துக்கு அவங்க போக போறதில்லையே!

