PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: கள்ளக்குறிச்சியில்
கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்கிறது. அங்கு, விடுதலை சிறுத்தைகள்
கட்சியினர் நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில், தி.மு.க.,வினர் பங்கேற்றது,
ஜீவகாருண்யமாநாட்டில் கசாப்பு கடைக்காரன் பங்கேற்றது போல் உள்ளது.
உவமை நல்லா தான் இருக்கு... அ.தி.மு.க.,வில் காளிமுத்து இல்லாத குறையை ஜெயகுமார் போக்கிடுவார் போலிருக்கு!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: அரசியல்அமைப்பில் இல்லாத ஒரு பதவிக்கு, மக்கள் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவர். சமூக நீதி, கொள்கை, கோட்பாடு எதுவுமே இல்லாமல், குடும்ப வாரிசுகளுக்கு கூஜா துாக்குவது, வயது வித்தியாசம்பார்க்காமல் காலில் விழுவது, சம்பாதிக்க வாய்ப்பிருந்தால்போதும் என்ற ஒற்றை கொள்கையில் பயணிப்பது தான் தி.மு.க., என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.
-துணை முதல்வர் என்பது,முதல்வர் பதவிக்கான முன்னோட்டம் என்பது தான், 'அக்மார்க்' உண்மை!
தமிழக காங்., பொதுச்செயலர் ரங்கபாஷ்யம் அறிக்கை: 'கோடீஸ்வரர்களின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும்மத்திய அரசு, ஏழை, விவசாயிகள், பெண்களின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. நாட்டில் எல்லா பணமும் சில கோடீஸ்வரர்களுக்கு செல்கிறது' என்ற ராகுலின் தேர்தல் பிரசாரத்தைஹரியானா மாநில மக்கள் வரவேற்றுள்ளனர். அங்கு காங்., வெற்றி உறுதி.
கடந்த கால காங்., ஆட்சிகளில் உருவான கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ராகுலுக்கு தெரியாதோ?
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: நாகை மாவட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில்,2016 - 2020 வரை, 146 வீடுகள் கட்டாமலேயே, பயனாளிகள் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். குழாய் வழியே குடிநீர், 100 நாள் வேலை திட்டம், விவசாயிகள் கவுரவ நிதி, அனைவருக்கும் சுகாதார காப்பீடு என, அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துவருகிறது. இதில் தொடர்புடையஅனைவரும் பதவி நீக்கம்செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு, தக்க தண்டனை பெற வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்தவங்களுக்கு, விருது கொடுக்காம இருந்தாலே பெரிய விஷயம்!

