PUBLISHED ON : ஆக 22, 2025 12:00 AM

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, 4.39 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டடத்தை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோருக்கும் குத்துவிளக்கேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மேயரான, தி.மு.க.,வைச் சேர்ந்த ரங்கநாயகி சற்று தாமதமாக நிகழ்ச்சிக்கு வந்தார். அவருக்கும் குத்துவிளக்கேற்றும் வாய்ப்பு கொடுக்க சில அதிகாரிகள் முற்பட்டனர். ஆனால், அமைச்சர் மூர்த்தி, அவர்கள் கையை பிடித்து, 'போதும்' என்றார். இதை புரிந்து கொண்டு, மேயரும் அமைதியாக அமர்ந்து விட்டார்.
மேயரின் ஆதரவாளர் ஒருவர், 'மாநகரில் எல்லா நிகழ்ச்சியிலும், மேயருக்கு தான் முதல் மரியாதை தரணும்... இங்க, மேயரம்மாவை கண்டுக்க மாட்டேங்கிறாங்களே...' என முணுமுணுக்க, 'அதுக்கு அவங்க நேரத்துக்கு வந்திருக்கணும்...' என, அருகில் இருந்தவர் பதிலடி தந்தார்.